கற்பித்தல் நேர அட்டவணை மாற்றத்துடன் எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் வழமைக்கு திரும்பும் – கல்வி அமைச்சு அறிவிப்பு அறிவிப்பு!

Wednesday, June 10th, 2020

பாடசாலைகள் திறந்த பின்னர் அதனை நடத்தி செல்லும் காலம் மற்றும் நேரத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய 3 ஆம் மற்றும் 4 ஆம் தரங்களில் கற்கும் மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 11.30 வரை பாடசாலைகள் நடத்தப்படவுள்ளன.

அத்துடன் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 12 மணி வரையும், 6 ஆம் தரம் முதல் 9 ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 வரையான காலப்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10ஆம் தரம்முதல் 13ஆம் தரம்வரையான பாடசாலை மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே எதிர்வரும் 29 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் பாடசாலைகள் திறக்கும் போது சுகாதார பணிப்பாளரின் பரிந்துரைக்கு அமையவும், பணிக்குழுவின் அறிவுரைக்கு அமையவும் செயற்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அலக பெரும தெரிவித்துள்ளார்.

இதற்கு உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைகள் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதுவரையில் கையேடுகளாக பாடசாலைகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றினை அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்குள் நுழையும் சந்தர்ப்பம்முதல் மீண்டும் பாடசாலைகள் நிறைவடைந்து வீட்டிற்கு செல்லும் வரையிலும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்.

அதற்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆலோசனைகளையும பின்பற்றி செயற்பட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி வரை எந்தவொரு கற்றல் நடவடிக்கைகளும் இடம்பெறாது எனவும் அதுவரை மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட மாட்டார்கள். இந்தக் காலப்பகுதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என நேற்று கல்வியமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: