கருங்கல், மணல், மண், சரளை மற்றும் களிமண் அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான உரிமங்களை வழங்குவது குறித்த புதிய சுற்றறிக்கை வெளியீடு!

Friday, October 15th, 2021

கருங்கல், மணல், மண், சரளை மற்றும் களிமண் அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான உரிமங்களை வழங்குவது குறித்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

அபிவிருத்திக்கு முக்கியத்துவமளித்தல், தனியார் தொழில் முயற்சியாளர்கள், சிறிய சுயதொழில் மற்றும் மரபு ரீதியான தொழில்களில் ஈடுபடுபவர்களின் பொருளாதார வாழ்வாதார அவசியத்துக்காக நில வளங்களை பயன்படுத்தல் மற்றும் அவற்றை பெற்றுக்கொள்ளும் அடிப்படைகள் மற்றும் பொறிமுறைகளை ஆய்வு செய்வதற்காக ஜனாதிபதியினால் ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நில வளங்களை அகழ்தல், போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துக்காக தற்போதுள்ள வழிமுறைகளினால் பொதுமக்கள், தனியார் நிறுவனங்களைப் போன்று அரச நிறுவனங்களும் முகங்கொடுத்து வருகின்ற கஷ்டங்களை ஒழித்து சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் உரிமங்களை வழங்குவதற்கான பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தல் அச்செயலணியின் பொறுப்பாகும்.

அந்த ஜனாதிபதி செயலணியினால் உருவாக்கப்பட்ட புதிய பொறிமுறை தொடர்பான ஆலோசனைகளை உள்ளடக்கிய “கட்டிட கைத்தொழிலுக்காக பயன்படுத்தப்படுகின்ற கனிய வள அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான செயற்பாடுகளுக்கு” அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

அதன் பிரகாரம் குறித்த அனைத்து நிறுவனங்களினதும் பிரதானிகள் கருங்கல், மணல், மண், சரளை மற்றும் களிமண் அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை முறைமைப்படுத்துவதுக்கு அவசியமான நடவடிக்கைகளை தாமதிக்காமல் முன்னெடுக்க வேண்டுமென்று ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அவர்கள் புதிய சுற்றறிக்கையின் மூலம் பணிப்புரை விடுத்துள்ளார்.

நில வளங்களை அகழ்வதற்கு பொருத்தமான இடங்களை முன்னரே கண்டறிதல், அவற்றை படவரைவுக்கு உட்படுத்தல், அந்நில வளங்கள் உரித்துடைய நிறுவனங்களை அடையாளம் காணல் மற்றும் அவசியமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை அந்தந்த நிறுவனங்களின் கட்டமைப்புக்குள் செயற்படுத்த வேண்டுமென்று நில வளங்கள் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.

குறித்த அனைத்து அரச நிறுவனங்களும் இதுவரை காலமும் தனித்தனியே செயற்படுத்தி வந்த பொறிமுறைக்குப் பதிலாக, ஒன்றுபட்ட பொறிமுறைக்குள் செயற்படுவதற்கு அவசியமான நிர்வாக அமைப்பை கட்டியெழுப்புதல் அல்லது மீளமைத்தல் முன்னெடுக்கப்பட வேண்டும்.

செயற்திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய, புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் மூலம் இது வரை உரிமங்களை வழங்குதல் தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த செயற்பாடுகளை முழுமையாக மீள் ஒழுங்குபடுத்துவதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சுற்றறிக்கையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையில்லாமல் நுகர்வோரை பல்வேறு நிறுவனங்களின் மூலம் அனுமதியைப் பெற்றுக்கொள்வதை தடுப்பதற்கு புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ள வகையில் மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு அவசியமான அதிகாரத்தை வழங்கவும், அவசியமான சட்ட ஆவணங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சுற்றறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலணியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறித்த கால எல்லைக்குள் தேவையான அனுமதி அல்லது சுற்றாடல் சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலவேளை தற்போது நடைமுறையில் உள்ள கட்டளைகள், வர்த்தமானி அறிக்கைகள், சுற்றறிக்கையை மறுசீரமைக்க வழி ஏற்படலாம். அதற்கு அவசியமான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதால், அவ்வாறான மறுசீரமைப்புகள் இருப்பின் அவற்றை தாமதிக்காமல், முழுமைப்படுத்துவதற்கு உரிய அரச நிறுவனங்களின் தலைவைர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகழ்வு உரிமத்தை வழங்குவதற்கு முன்னர், குறித்த அனைத்து அரச நிறுவனங்களுக்காவும் பணம் அறவிடுதல் புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் மூலம் நடைபெறுவதோடு, அப்பணம் சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள அனுமதி பெற்ற கணக்கில் வைப்பிலிடப்படல் வேண்டும். கட்டுமான கைத்தொழிலுக்காக பயன்படுத்தப்படுகின்ற கனிய வள அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான கட்டளை சட்டத்தின் கீழ் நியமித்துள்ள அறவிடுதலைத் தவிர, இதற்காக நிதி அமைச்சின் செயலாளரின் அனுமதியின்றி ஏனைய பண அறவிடுதல்கள் அல்லது அறிவிடுதல் தொடர்பான மறுசீரமைப்புக்களை செயற்படுத்தக் கூடாதென்று சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம் அமைச்சரவை அனுமதித்துள்ள பொறிமுறைகள் தொடர்பாக உயரிய ஒத்துழைப்பை அனைத்து அரச நிறுவனங்களில் இருந்தும் பெற்றுக்கொள்வதுக்கு அவசியமான தொடர்ச்சியான செயற்றிட்டம் ஒன்றையும் கண்காணிப்பையும் சுற்றாடல் அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.

யாதேனும் அரச நிறுவனம் ஒன்று அவசியமான ஒத்துழைப்பை வழங்காதவிடத்து, அது தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை தமக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அவர்கள் சுற்றறிக்கையின் மூலம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


ஹோட்டல்களில் திருமண வைபவங்களை நடத்த இன்றுமுதல் அனுமதி - சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்ச...
கொழும்பு துறைமுகத்தில் சீன கிறேன்கள் தரையிறக்கம் - பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டனர் ஊழியர்கள்!
சீராக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுங்கள் - அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவு!