கதர் வேட்டியும் கால்ச் செருப்பும் அணிந்த எளிமையான தலைவர் டக்ளஸ் தேவானந்தா – தயாபரன் சுட்டிக்காட்டு!

Tuesday, January 30th, 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலித் தேசியவாதமும் பொய் வேஷமும் ஒருபோதும் நிலைத்துநிற்க மாட்டாது என்பதுடன் அவர்களது உசுப்பேற்றும் அரசியல் எதிர்காலத்தில் மக்களிடம் பலிக்கமாட்டாது என்றும்  தயாபரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் கற்குளம் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் விடுதலைப் போராட்டத்தையும் போராளிகளையும் முன்வைத்து தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து அதனூடாக வெற்றிகளையும் பெற்றிருந்தார்கள்.

ஆனால் தேர்தல் வெற்றிகளுக்குப் பின்னர் போராளிகளையோ அவர்கள் குடும்பங்களையோ அன்றி களப்பலியான போராளிக் குடும்பங்களது நலன்களோ அவர்கள் அக்கறை காட்டியது கிடையாது. அவர்களை நம்பி வாக்களித்த குறித்த குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இன்று நடுத்தெருவில் நின்று ஒருவேளை சோற்றுக்காக தவியாய் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் அவர்களிடமிருந்து வாக்குகளைப் பெற்று தேர்தல்களில் வெற்றிபெற்ற கூட்டமைப்பினர் தமது சுகபோக வாழ்க்கையை நன்றாக அனுபவித்து மகிழ்கின்றனர்.

தமது பிள்ளைகளுக்கு உல்லாச வாழ்க்கை ஆடம்பர வீடுகள், சொகுசு வாகனங்கள், என்று இன்னோரென்ன அனுகூலங்களை எல்லாம் அவர்கள் அனுபவிக்க அவர்களை நம்பி வாக்களித்தவர்கள் இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் ஒருவேளை சோறு கூடக் கிடைக்காது அங்கலாய்த்துத் தவியாய் தவிக்கின்றனர்.

ஆனால் மக்களின் தேவைகளை அறிந்து அந்தத் தேவைகளுக்கேற்ப முடியுமானவரையில் சேவைகளைச் செய்துவரும் அதேவேளை மக்கள் கேட்கமுன்பதாகவே பிரச்சினைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் தீர்வுகண்டுவருபவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே.

காலச்சுற்றோட்டத்தில் கதர் வேட்டியும் கால்ச் செருப்பும் மாகாத்மா காந்திக்குப் பின்னர் கச்சிதமாய் பொருந்திய அரசியல் தலைவராக டக்ளஸ் தேவானந்தா மட்டுமே திகழ்கின்றார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஆதலினால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் போலித் தேசியவாதமும் அவர்களது பொய் வேஷமும் இன்று வெள்ளிடை மலையாக தெரிகின்ற நிலையில் மக்கள் சரியாக நிதானித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் என்றும் தயாபரன் சுட்டிக்காட்டினார்.

ஈழ மக்கள் ஜநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் யாழ்ப்பாணம் மடம் வீதி, நல்லூர் வடக்கு கொண்டலடி, பிராமணக்கட்டக் குளம், ஆறுகால்மடம், நாவாந்துறை, கண்ணாபுரம் கொட்டடி, சோலைபுரம், கற்குளம் ஆகிய பகுதிகளிலும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் பெருந்திரளான மக்கள் பிரசன்னத்துடன் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: