கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய பயணிகள் முனைய வளாகத்தை நிர்மாணிப்பதில் தாமதம் – ஒப்பந்தக்காரர்களிடம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிருப்தி!

Saturday, June 4th, 2022

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனைய வளாகத்தை நிர்மாணிப்பதில் ஏற்பட்டுள்ள கடுமையான தாமதம் தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஒப்பந்தக்காரர்களிடம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நிர்மாண நிறுவனங்களை ஜப்பான் அரசாங்கமே தெரிவு செய்துள்ளதாகவும், நிர்மாணப் பணிகளில் ஏற்பட்டுள்ள பாரிய தாமதம் தொடர்பில் ஜப்பான் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அண்மையில் நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் இந்த நிர்மாணப் பணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும் இதுவரையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம் மற்றும் அது தொடர்பான விமான இயக்க முறைமையை நிர்மாணிப்பதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த அபிவிருத்தி திட்டத்தின் மொத்த மதிப்பீடு 113 பில்லியன்ல ரூபா என அரசாங்க தகவல் திணைக்களம் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதுடன், JICA நிறுவனம் நிர்மாணப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. நிர்மாணப் பணிகள் இதுவரை திருப்திகரமாக பூர்த்தி செய்யப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமான நிலையத்திற்கான இரண்டாவது முனையத்தை தற்போதுள்ள சர்வதேச தரத்திற்கு அமைய நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அதன் பாதுகாப்பு அமைப்பு ஆரம்ப திட்டத்திற்கு மாறாக தற்போது நிர்ணயிக்கப்பட்ட தரத்துக்கு புறம்பாக அமைக்க தயாராகி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். நிர்மாண நிறுவனம் செயலிழந்த நிலையிலும், எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்ட திகதியில் முடிப்பது ஒப்பந்ததாரரின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: