கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறைந்த இராஜாங்க அமைச்சருக்கு அஞ்சலி!

Thursday, January 25th, 2024

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அவரது சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலனொன்றின் பின்பகுதியில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில்  படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் ஜெயக்கொடி என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு விஜயம் செய்தார்.

இராஜாங்க அமைச்சரின் கொழும்பில் உள்ள  இல்லத்திற்கே அதிபர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு சென்ற அதிபர் ரணில் விக்ரமசிங்க, உறவினர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இதனிடையே இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் பேரதிர்ச்சியளிக்கின்றது. ஒரு துடிப்பான இளம் அரசியல்வாதியாக மக்களுக்கு சேவைகளை முன்னெடுத்த அவரின் மரணம் பேரிழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும், அவரின் மெய்பாதுகாவலரும் உயிரிழந்துவிட்டனர் என்ற செய்தியை கேள்வியுற்றதும் அடைந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் இன்னும் மீளமுடியவில்லை.

எனது அமைச்சில் இராஜாங்க அமைச்சராக புரிந்துணர்வுடனும், நட்புறவுடனும் செயற்பட்டவர் அவர், மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்ற உறுதியான கொள்கையுடன் செயற்பட்டவர்.

புத்தளம் மாவட்ட மக்களுக்காக மட்டுமின்றி முழு நாட்டுக்கும் சேவையாற்றியவர். மலையக மக்கள் தொடர்பிலும் புரிந்துணர்வுடன் செயற்பட்ட எனது சிறந்த நண்பர்.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன், உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.  என்றுள்ளது.

அத்துடன்

விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் என்பது மிகப்பெரிய இழப்பு என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சனத் நிஷந்தவின் வீட்டிற்கு சென்ற மகிந்த ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் அனைத்த நடவடிக்கைளிலும் துணையிருந்தார். கட்சி நடவடிக்கைகள் மாகாண சபை நடவடிக்கை உள்ளிட்ட அனைத்திலும் முன்னின்று செயற்பட்டார்.

அவரது இழப்பு எங்கள் கட்சிக்கும், நாட்டிற்கும், இனத்திற்கும் மிப்பெரிய இழப்பாகும். அவர் தனது மாகாணத்திற்காக மட்டும் செயற்படவில்லை. முழு நாட்டிற்காகவும் சேவை செய்தார்.

ஒரு இடத்திற்குள் மட்டுப்பட்ட சேவையை வழங்கவில்லை. கட்சியில் ஒரு தலைமைத்துவத்தை இழப்பதென்பது இலகுவான விடயமல்ல. அவர் மிகப்பெரிய சக்தியாக இருந்தார்” என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: