கடற்கரை வீதி புனரமைக்கப்படவில்லை: சிரமங்களுக்கு மத்தியில் போக்குவரத்து!

Sunday, November 19th, 2017

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் பிரதான வீதிகளில் ஒன்றாகிய கடற்கரை வீதி நீண்டகாலமாக முழுமையான புனரமைப்பு செய்யப்படாததால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இவ்வீதியில் சுமார் 4 கி.மீற்றர் மட்டும் புனரமைப்பு செய்யப்பட்டபோதிலும் மிகுதிப் பகுதி புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. உடுத்துறை தொடக்கம் கட்டைக்காடு வரையிலான சுமார் 10 கி.மீற்றர் வீதி மிகவும் பாதிப்படைந்த நிலையில் மக்கள் பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளது.

இவ்வீதியில் பருத்தித்துறை யாழ்ப்பாணம் சாலைகளிலிருந்து இ.போ.ச. பேருந்து சேவைகளும் தனியார் பேருந்து சேவைகளும் மிகுந்த இடர்பாடுகளுக்கு மத்தியில் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் பயணம் செய்கின்ற ஆசிரியர்கள், மாணவர்கள், ஏனைய அரச அலுவலகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தினமும் சிரமப்பட்டுப் பயணத்தை தொடர்கின்றனர்.

இவ்வீதி விரைவில் திருத்தம் செய்யப்பட்டு காபெற் வீதியாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை இடம்பெற்றதாக தெரியவில்லை.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக குன்றும் குழியுமாக இருக்கின்ற இவ்வீதியில் பயணம் செய்யும் மக்களும் வாகன ஓட்டுநர்களும் மிகுந்த சிரமத்திற்குட்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts: