கடந்த காலத்தின் குறைகள் தொடர்பில் விவாதித்துக்கொண்டிராது, நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டு – ஜீ – 20 சர்வமத மாநாட்டில் பிரதமர் மஹிந்த வலியுறுத்து!

Monday, September 13th, 2021

கடந்த காலத்தின் குறைகளைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, நாம் நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டு என வலியுறுத்தியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தேசத்தின் ஒற்றுமையிலும் சகவாழ்விலுமே ஒவ்வொரு  தேசத்தினதும்  எதிர்காலம் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் போலோக்னா நகரில் நடைபெறும் G20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப தினத்தன்று உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது, பெரும்பாலும் ஒரு தேசத்தின் எதிர்காலம் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே தங்கியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ‘கலாசாரங்களுக்கிடையே சமாதானம், மதங்களிடையே புரிதல்’ எனும் தொனிப்பொருளில் நடைபெறும் G20 சர்வமத மாநாட்டில் உரையாற்ற கிடைத்தமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டிருந்த பிரமர் மாநாட்டின் தொனிப்பொருள் இலங்கைக்கும் தெற்காசியாவின் புவியியல் வலயத்திற்கும் பொருத்தமானதாக காணப்படுவதால், இதனை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இன, மத மற்றும் கலாசார பன்முகத்தன்மை என்பன பிராந்தியத்தின் முக்கிய அம்சங்களாகும் என சுட்டிக்காட்டிய பிரதமர், ஜீ 20 நாடுகளில் பல்வேறு இன, மத மற்றும் கலாசார பின்னணிகளைக் கொண்ட மக்கள் வசிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இந்த வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றிணைந்து, பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்து, முதிர்நிலை தேசம் என்ற உணர்வை கட்டியெழுப்பும் சவாலுக்கு நாம் பதிலளித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகள் என்பன யுகத்தின் மிக முக்கியமான சவால்கள் எனவும் சுட்டிக்காட்டியிரந்த பிரதமர் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டியிருந்தார்.

இதனிடையே கல்வியை மிக முக்கிய துறையாக அடையாளம் காண்பதற்கு நான் ஒருபோதும் தயங்கமாட்டேன் எனவும் தெரிவித்திருந்த பிரதமர், குழந்தை பருவத்தின்போதே சரியான அணுகுமுறைகளை போதிப்பதற்கும், மதிப்பை மேம்படுத்துவதற்கும் அதிக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன். வெவ்வேறு மதங்களின் சாராம்சத்தில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படினும், அனைத்து மதங்களினதும் நம்பிக்கை பொதுவானதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒருமைப்பாடுள்ள சகல மதங்களினதும் பொது விடயங்கள் தொடர்பில் வலியுறுத்துவதே கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் கடமையாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை வீடுகள், வேலை செய்யும் இடங்கள் மற்றும் சமூகத்தில் திருட்டில் ஈடுபடல் மற்றும் பல்வேறு பாகுபாடுகளுக்கு எதிராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் எமது அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியிரந்த பிரதமர் காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்தும் நாம் முக்கியத்துமளித்து செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் நல்லிணக்கம் என்பது நம் காலத்தின் முக்கியமான தேவையாகும். மோதல்களும் நம்மைச் சுற்றி அதிகரித்து வரும் இடையூறுகளும் பொதுவானவை. எங்களுடன் வலுவாக உடன்படாதவர்கள் உட்பட நம் நாடுகளில் வாழும் அனைவருடனுமான சிறந்த உறவின் மூலமே சமாதானமும், ஸ்திரத்தன்மையும் ஏற்படுகிறது.

அத்துடன் வெறுப்பை வெறுப்பால் அல்ல அன்பினால் மட்டுமே வெல்ல முடியும் என்றே நம் மதம் நமக்கு போதிக்கிறது.

அந்தவகையில் கடந்த காலத்தின் குறைகளைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, நாம் நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். நாம் சகோதரத்துவம் மற்றும் புரிதலின் ஊடாக உறவுகளை வளர்த்துக் கொண்டால் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அற்புதமான புதிய எல்லையை அடையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: