ஒரே நாடு ஒரே நீதி – நாட்டில் எந்தவொரு நபரும் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் இன்றி வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்திகொடுக்கப்படும் – கொள்கை உரையில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு.!

Thursday, August 20th, 2020

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை இரத்துச் செய்து புதிய அரசியலமைப்பு முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரே நாடு – ஒரே நீதி என்ற கொள்கை அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் கொள்கை விளக்க உரை நிகழ்த்தியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொது தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும், நாட்டில் எந்தவொரு நபருக்கும் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் இன்றி வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்திகொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மக்கள் வழங்கிய ஆணையை ஏற்று மக்களுக்காக சேவை செய்ய முன்னின்று செயற்படுவதாகவும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டு மக்கள் பயமின்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை உறுவாக்குவதுடன், பொது மக்களின் வாழ்கைக்கு தடையாக இருந்த பாதாள உலகக்குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதற்கான சட்டத்திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் கடுமையாக்கப்படும் எனவும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல், அரச நிறுவனங்களில் ஊழியர்களை நியமிப்பதற்காக காணப்பட்ட பாரம்பரிய முறைமையை மாற்றியமைத்து புதிய முறைமை ஒன்றை தான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல்,நெல் உற்பத்தியாளர்களுக்கான உரிய விலையை பெற்றுததர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுவதுடன்,கைவிடப்பட்டுள்ள விவசாய மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உயர்தப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் வகையில், பல்கலைக்கழக அமைப்பினை விரிவுப்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை ஏற்றுக்கொள்வதுடன், மக்கள் தம் மீது கொண்ட நம்பிக்கைகை்கு நன்றி செலுத்தும் வகையில் தான் சேவையாற்றுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்துடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பிரமுகர்களும் மக்களுக்கு சேவையாற்ற தான் உதவி செய்வதாகவும் ஒரு போதும் அவர்களை கைவிட மாட்டேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் மக்கள் தற்சமயம் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைக்கான தீர்வும் பெற்றுத்தரப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கும் இறப்பர் உற்பத்தி தேவையான உதவிகளை வழங்குவதுடன், இறப்பர் தொடர்பான தொழிலதிபர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மிளகு, கருவா ஆகிய உற்பத்திகளுக்கான ஏற்றுமதிகளை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும், விவசாய உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஏற்றுமதி செய்வதன் மூலம் விவசாயத்திற்கு நிலையான விலை ஒன்றினை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டின் விவசாயத்துறைக்கு முழுமையாக செயற்கை உரத்தை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் உயிர்த்து ஞாயிறு தாக்குதல் மூலம் பாதுகாப்பு துறையினர் மீது நம்பிக்கையிழந்த மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: