ஒரு சமூகத்தின் கல்வியறிவின் கணிப்பீடாக இருப்பது வாசிப்பு நிலையே – தேசிய வாசிப்பு நிகழ்வில் வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!
Friday, November 30th, 2018
ஒரு சமூகத்தின் கல்வியறிவின் கணிப்பீடாக வாசிப்பு நிலை கொள்ளப்படுகின்றது. அந்தவகையில் ஒரு மனிதனை வாழ்க்கையில் சமூகத்தில் சிறந்தவனாக ஒரு நற்பிரஜையாக உருவாக்குவதில் இந்த வாசிப்பு பழக்கம் அதிகளவில் பங்கெடுக்கின்றது என வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாதம் இன்றைய தினம் பிரதேச சபையின் ஏற்பாட்டில் தேவா மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் :
தற்போதைய காலமாற்றத்தினால் குறிப்பாக நவீன தொழில் நுட்பங்களின் வருகையால் அனைத்து செயற்பாடுகளும் சுருங்கிவிட்டன. இதனால் எமது இளம் சந்ததியினர் மத்தியில் வாசிப்பின் தன்மையும் சற்று குறைவடைந்துசெல்லும் நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையை மாற்றியமைத்து எமது மாணவச் செல்வங்களின் மத்தியில் வாசிப்பின் மகத்துவத்தை வேரூன்றச்செய்ய துறைசார் பொறுப்புகளில் உள்ள அனைவரும் தத்தமது பங்களிப்புகளை மேற்கொள்ளவேண்டும்.
எமது வேலணை பிரதேசத்தில் 5 பொது நூலகங்கள் காணப்படுகின்றன. இவற்றின் செயற்பாடுகளை அதிகரிப்பதற்காக நாம் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல இலட்சம் ரூபா நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளோம்.
அந்தவகையில் எமது பிரதேசத்தில் உள்ள நூலகங்களில் ஒவ்வொருவரும் வாசகராகுங்கள். அதனூடாக அறிவை பல்துறைகளிலும் வளர்த்து எமது ஒவ்வொருவரது எதிர்காலத்தையும் பிரதேசத்தினது எதிர்காலத்தையும் சிறந்ததாக உருவாக்குங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வின் போது பாடசாலை மாணவர்கள் மட்டத்தில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.
Related posts:
|
|
|


