ஒப்பந்ததாரர்களுக்கு அரசு வழங்க வேண்டிய 122 பில்லியன் ரூபாவை செலுத்த நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Thursday, October 27th, 2022

பல கட்டங்களின் கீழ் அரசாங்க ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை உடனடியாக வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இவ்வருட இறுதிக்குள் 20 பில்லியன் ரூபா நிதி வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் எஞ்சியுள்ள அனைத்து நிலுவைகளையும் செலுத்த அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருவதாகவும் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறினார்.

இது தவிர கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்தும் ஆராய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இந்த வாரம் கூடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாட்டில் கட்டுமானத் தொழிலில் சுமார் 10 இலட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றுகிறார்கள். கொவிட் தொற்று பரவியதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் கட்டுமானத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, இறக்குமதி கட்டுப்பாடுகள், விநியோகம் மற்றும் போக்குவரத்தில் தாமதம், வங்கி வசதிகள் கட்டுப்பாடு, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுபதி சரிவு, எரிபொருள் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு போன்றவை கட்டுமானத் துறையை பாதித்தது.

இந்நிலைமை காரணமாக ஒப்பந்தக்காரர்களுக்கு அரச நிறுவனங்களால் வழங்கப்பட வேண்டிய 122 பில்லியன் ரூபா பணத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணத் தொழிலுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்காலத்தில் திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவுள்ளதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதேவேளை தற்போதைய நெருக்கடியை பயன்படுத்தி அலுமினியம், இரும்பு, பி.வி.சி குழாய்கள், கம்பிகள், தரையோடுகள் போன்றவற்றுக்கான மூலப்பொருட்களின் விலையை வியாபாரிகள் உயர்த்தியுள்ளனர். அமைச்சு மட்டத்தில் தலையிட்டு அந்தப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

இதன்படி, சீமெந்து, இரும்பு, தரை ஓடுகள், பீங்கான், அலுமினியம் போன்ற அத்தியாவசியமான கட்டுமானப் பொருட்களை சந்தையில் இருந்து இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில், C/S இலங்கை கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்து விநியோகிக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: