ஐ.நாவில் இன்று வாக்கெடுப்புக்கான சாத்தியம் – எதிர்கொள்ள தாயாரானது இலங்கை!

Monday, March 22nd, 2021

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்றைய தினம் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்பதாக இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன.

விவாதத்தின் இடைநடுவே, சில நாடுகள் தலையீடும் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை வரை பிற்போடப்படலாம் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

47 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், குறித்த பிரேரணை தொடர்பில், தமது நட்பு நாடுகளுக்கு அறிவுறுத்துவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், நோபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய வலய நாடுகளின் ஒத்துழைப்பை கிடைக்கும் எனவும் இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா இது குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்காத போதிலும், பெரும்பாலும் வாக்களிப்பில் இருந்து விலகி இருக்கும் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே, இலங்கை தொடர்பிலான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் விமர்சித்துள்ளதுடன் இலங்கைக்கு எதிரான பிரேரணை, குறித்த அறிக்கைக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன.

இந்தநிலையில், மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிக்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக அந்த நாட்டின் – இன்டர்நெஷனல் செய்தி தளம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் பேரவையில் மூன்று ஆண்டு கால உறுப்புரிமைக்காக கடந்த ஜனவரி மாதம் பாகிஸதான் மீள தெரிவானதுடன் இலங்கை தொடர்பில், இதற்கு முன்னதாக முன்வைக்கப்பட்ட பிரேரணைகளின்போது, அதற்கு எதிராக பாகிஸ்தான் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் , Dr. Yousef A. Al-othaimeen- க்கு நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அழைப்பை மேற்கொண்டு அந்த அமைப்புக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்து விவாதித்தார் என தெரிவித்துள்ள அந்த அமைப்பு ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பையும், சர்வதேச அமைப்புகளைத் திறந்து அணுகுவதற்கான அவரது விருப்பத்தையும் பாராட்டியதாகவும், இஸ்லாமிய சடங்குகளுக்கு ஏற்ப முஸ்லிம்களின் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான உரிமை குறித்து இலங்கை அரசாங்கத்தின் முடிவை Dr. Yousef A. Al-othaimeen வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பஹ்ரைனைச் சேர்ந்த துணை மன்னர் Salman bin Hamad Al Khalifa- வை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் தான் ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்திலிருந்தே இலங்கையில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட மேற்கொண்ட முயற்சிகளை Salman bin Hamad Al Khalifa நினைவு கூர்ந்து பாராட்டியதாக ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஒரு பகுதியாக இருக்கும் பல முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய முஸ்லிம் அமைப்பு OIC ஆகும்.

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உலக முஸ்லிம் தலைவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: