ஏற்றுமதி துறையின் தடைகளை இனங்கண்டு தீர்ப்பதற்கு முழுமையான உதவியை வழங்க தயார் – ஜனாதிபதி அறிவிப்பு!

Friday, June 12th, 2020

 

ஏற்றுமதி துறையின் பிரச்சினைகள் மற்றும் தடைகளை சரியாக இனங்கண்டு அவற்றை தீர்ப்பதற்கு முழுமையான உதவியை வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி வியாபாரத் துறையின் முன்னணி வர்த்தகர்களுடன் நேற்றையதினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மிகவும் சிறியளவில் உள்ள ஏற்றுமதித் துறையை சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு விரிந்தளவில் எடுத்துச் சென்று நல்ல பெறுபேறுகளை கொண்டுவருவது ஏற்றுமதியாளர்களின் முன்உள்ள சவாலாகும்.

கொவிட் 19 நோய்த்தொற்று பரவல் காரணமாக பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் பின்னடைவை கண்டுள்ளன.

நோயை ஒழித்து நாட்டை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளுடன் எதிர்பார்ப்புகளை கடந்து பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஒரு சில வர்த்தகங்கள் மட்டுமே ஒரு பில்லியனுக்கும் அதிகமான அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டுகின்றன.

எனினும் அதனை இன்னும் அதிகளவு விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொவிட் 19 பரவலுடன் உலக பொருளாதாரத்தில் புதிய சந்தையொன்று உருவாகியுள்ளது.

மத்திய கிழக்கு, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய பிராந்தியத்தில் பாரிய சந்தையொன்று உருவாகி வருகிறது.

சிறிய நாடு என்ற போதும் அரசாங்கம் கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்கு அதிக முதலீட்டை செய்துள்ளது. அதனாலேயே கொவிட்19 நோய்த்தொற்றுக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்க முடிந்தது.

நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான விவசாய பயிர்கள் மற்றும் அத்தியாவசியமில்லாத பொருட்களின் இறக்குமதியை இடைநிறுத்தியதன் மூலம் அந்நியச் செலாவணி விகிதத்தை கட்டுப்படுத்தவும், விவசாயிகளை பாதுகாப்பதற்கும் அரசாங்கத்திற்கு முடியுமாக இருந்தது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts: