எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!
Sunday, July 10th, 2022
எரிவாயு ஏற்றுமதி இன்று பிற்பகல் நாட்டிற்கு வந்தவுடன் எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் ஊடக அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆயிரத்து 700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று பிற்பகல் 3 மணிக்கு இலங்கையை வந்தடைந்தது சீரற்ற காலநிலை காரணமாக அந்த கப்பல் இலங்கையை வந்தடைய தாமதமாகியுள்ளது.
அதேவேளை நாளைமறுதினம் (11-07-2022) மற்றும் 16 ஆம் திகதியும் மேலும் 3 ஆயிரத்து 700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் 30 ஆயிரம் மெற்றி தொன் எரிவாயு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..
இதேவேளை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றையதினம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஈரானிய தூதுவருடனான சந்திப்பையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து இராணுவத்தினரால் இரகசியமாக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கோட்டாபய ராஜபக்ச எங்கிருக்கின்றார் என்பது தெரியவராத நிலையில், அவர் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவப் பிரிவினால் பாதுகாக்கப்படுவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி அலுவலகம் போராட்டக்காரர்களால் தற்போதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிற்பகல் கூடிய கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதியின் இருப்பிடம் குறித்து தகவல் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இதன்போது ஜனாதிபதி அலுவலகத்தில் ஈரானிய தூதுவருடனான சந்திப்பையடுத்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஜனாதிபதி தொடர்பில் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


