எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Monday, May 2nd, 2022

தொடருந்து, அரச முகவர் எரிபொருள் தாங்கிகள் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், சில தனியார் எரிபொருள் தாங்கி சாரதிகள் விநியோக பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் இதனால் துரிதகதியில் இடம்பெறும் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது கிராமப் புறங்களுக்கு தொடருந்துகளில் கொண்டு செல்லப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்கவும், டிப்போக்களுக்குத் தேவையான எரிபொருளை மட்டும் தொடருந்துகளில் கொண்டு செல்லவும் அமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமது தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள தொழிற்சங்கம், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடரும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக நேற்று எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனமும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தியன் எண்ணெய் தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கமும் எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: