எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டினை தனியாருக்கு வழங்க நடவடிக்கை – பெட்ரோலியப் பொருட்கள் சட்டமூலத்தின் முரணான சரத்துக்களும் திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்படும் – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Friday, September 23rd, 2022

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1250 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டினை தனியாருக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியாருக்கு வழங்குவதற்கான வேலைதிட்டத்தின் மீளாய்வு கூட்டத்தின் போதே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களைின் கட்டுப்பாட்டினை பெற்றுக்கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும், எரிபொருளை விநியோகிப்பதற்கும், எரிபொருளை விற்பனை செய்வதற்கும் அதிகாரங்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபத்தின் எரிபொருள் நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்திற்கு அமைய இதுவரை 24 நிறுவனங்களிடமிருந்து கேள்வி பத்திரத்துக்கான இணக்க மனு கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ள அரசியலமைப்புக்கு முரணான சரத்துக்கள் மற்றும் பகுதிகள் திருத்தப்பட்டு உடனடியாக சமர்ப்பிக்கப்படும் எனவும் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

41,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கே இந்த கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 7 ஆம் திகதி குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்தது.

இதேவேளை, கொள்வனவு செய்யப்பட்ட பெற்றோல் அடங்கிய கப்பலிலிருந்து பெற்றோலை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனை தவிர எதிர்வரும் நவம்பர் மாதம் நாட்டை வந்தடையவுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கான ஆரம்ப கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: