எரிபொருளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை – தேவையற்ற வகையில் எரிபொருளை சேமித்து வைப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு!
 Friday, June 17th, 2022
        
                    Friday, June 17th, 2022
            
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள மற்றும் எதிர்வரும் காலங்களில் கிடைக்கப்பெறவுள்ள எரிபொருள் தொகையை முறையாக நாடுமுழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
நிதியமைச்சு, மத்திய வங்கியுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஒத்துழைப்புடன், போதியளவு எரிபொருளை கோருவதற்கு வசதியளித்து, நாணயக் கடிதங்களை திறக்க திட்டம் வகுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் இன்று (17) கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது, ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கினார்.
வழங்குநர்களுடன் நீண்டகாலத்துக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான இயலுமைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
எரிபொருள் விநியோகத்தின்போது, பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நிரப்பு நிலையங்களில், தனியார், சுற்றுலா பேருந்துகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களுக்கு காவல்துறையினரின் கண்காணிப்பில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிலையங்களில் தொடர்ச்சியாக எரிபொருள் வழங்குவதற்காக நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற வகையில் எரிபொருளை சேமித்து வைப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தற்போது கைவசமுள்ள எரிவாயுவை முறையாக விநியோகிப்பதற்கும், தேவையான அளவு எரிவாயுவை விரைவாக கோருவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        