எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை – அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, March 26th, 2024

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

1994 ஆம் ஆண்டுமுதல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் ஊழலுக்கு எதிராக போராடுவதாகவும், தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்வதாகவும், வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருப்பினும் இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊழலை கட்டுப்படுத்துவதற்கும் விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் ஏற்கனவே திருத்தங்களை சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தது. அதுவரை ஜனாதிபதி ஒருவர் கொலை செய்திருந்தாலும், அவர் மீது வழக்குத் தொடர முடியாத நிலை இருந்தது. ஆனால் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அந்த நிலையை மாற்றியது.

இதற்கமைய, இதுவரை நான்கு ஜனாதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஊழலை தடுக்க சட்ட அதிகாரம் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிமுதல் கீழ்நிலை அதிகாரி வரை சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை கண்காணிக்கும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழு தொடர்பான பல திருத்தங்கள் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஊழல் கண்காணிப்பு ஆணைக்குழுவை ஒரு சுதந்திரமான நிறுவனமாக மாற்றுவதற்கு தேவையான சட்டத்தை இயற்றுவதே இதன் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இதுவரையில் முன்வைக்கப்பட்ட தேர்தல் திருத்தங்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் இருப்பதாக சமூகத்தில் சிலர் கருத்து வெளியிடுகின்றனர். ஆனால் இந்தத் திருத்தங்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்க எதிர்பார்க்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: