எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் இலங்கை பங்கேற்காது – இந்தியப் பெருங்கடலில் பிரச்சனைகள் வருவதையும் விரும்பவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் இலங்கை பங்கேற்காது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பெருங்கடலில் பிரச்சனைகள் வருவதை இலங்கை நிச்சயமாக விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார்.
மேலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடற்பயண சுதந்திரத்தை நிலைநாட்டவும் இலங்கையை கடல்சார் வர்த்தக மையமாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நல்லதொரு பாதுகாப்பு அமைப்பை இழந்தால் நாட்டின் எதிர்காலம் அழிந்து உலக நிலைமையும் புவிசார் அரசியலும் மிகவும் மோசமாக மாறிவிடும். இது நாட்டுக்கு நல்லதல்ல என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு என்ற ரீதியில் 2030 ஆம் ஆண்டு பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஒரு இராணுவத் துறைமுகம் அல்ல என்றும் ரணில் குறிப்பிட்டார்
சீனாவுடன் இலங்கை செய்து கொள்ளும் அடுத்த ஒப்பந்தம் அவ்வாறான ஊகங்களை ஏற்படுத்தாது என நம்புவதாகவும், அந்த நாட்டுடனான உடன்படிக்கைகள் இலங்கைக்கான கடனைக் குறைப்பதாகவே அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடலில் பெரும் வல்லரசுகளின் மோதலுக்கு வழிவகுக்காமல் இருப்பதை நாடு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|