எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும் மக்களே முதன்மையானவர்கள் என்ற தமது கொள்கையில் மாற்றம் ஏற்படாது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, May 29th, 2020

கொரோனா வைரஸ் பரவல் மத்தியில் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும்  மக்களே முதன்மையானவர்கள் என்ற தமது கொள்கையில் மாற்றம் ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொரோனா மற்றும் அதற்கு பின்னரான காலங்களில் அபிவிருத்திக்கான நிதியுதவி குறித்த உயர்மட்ட காணொளி மாநாடு நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மாநாடு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், கனடா மற்றும் ஜமைக்கா நாடுகளின் பிரதமர்களால்; ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, உலகளாவிய வர்த்தகம், சுற்றுலா, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை ஸ்தம்பிதமடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

தொற்றுநோய் நிலைமையானது நிலையான வர்த்தகங்கள் மற்றும் பொருளாதாரங்களை திடீரென சீர்குலைத்து, நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையான பொருளாதாரம், மேலும் வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில்லை என்பதால் அரசின் வருமான பற்றாக்குறையை முறையாகக் குறைத்து வரும் நாடுகள் பின்னடைவை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியடைந்து வரும் போக்கில் இருந்த கடன் தலைகீழ் மாற்றத்தைக் கண்டுள்ளது. செயற்படாத சொத்துக்கள் உயர்ந்து திரவத்தன்மை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் வங்கித்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

முழு சேமிப்பு, முதலீட்டு சமன்பாடு சரிவடைந்துள்ள காரணத்தினால் அபிவிருத்திக்கு நிதியளித்தல் என்பது உலகப் பொருளாதாரத்திற்கு பொருத்தமான தலைப்பாக உள்ளது.

தொழிலாளர் வருமானம், ஏற்றுமதி சார்ந்த வருமானம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சேவைகள் மூலம் இலங்கையின் பிரதான பரிமாற்ற வழிகள் எமது உண்மையான பொருளாதாரத்தை பாதித்துள்ளன.

தாம் மிகவும் மதிக்கும் ஒரே சொத்து மனித அபிவிருத்தி என்பதால் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும் மக்களே முதன்மையானவர்கள் என்ற எமது கொள்கையில் மாற்றம் இல்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: