எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் உத்தரவு!

Saturday, October 22nd, 2022

இலங்கையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரைகளை வழங்கினார். 

2023 ஆம் ஆண்டுக்குள் 8 இலட்சத்து 50,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்த சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை விஸ்தரிப்பதன் மூலம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கான நிதிப் பரிமாற்றல், இலங்கை பற்றிய எதிர்மறையான கருத்துக்களை அகற்ற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை வெளிநாட்டு விமானங்களை தரையிறக்குவதற்கு அதிக கட்டணம் அறவிடப்படுவதால் சுற்றுலாத்துறையினருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் ஆராய்ந்து பிரச்சினையைத் தீர்க்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: