எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பு விடயங்களை தாமதப்படுத்த இலஞ்சம் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் கோரிக்கை!

Monday, April 17th, 2023

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி எரிந்தமையால் இலங்கை கடற்பரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடமிருந்து நட்டஈடு பெறுவது தொடர்பில் கலந்துரையாடலின்போது இலங்கையின் ஒரு தரப்புக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதுதொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருக்கிறேன் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடல் பகுதியில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெறும் நடவடிக்கையில் ஒரு தரப்புக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எக்ஸ்பிரஸ பேர்ள் கப்பல் தீப்பற்றி எரிந்தமையால் இலங்கை கடற்பரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடமிருந்து நட்டஈடு பெறுவது தொடர்பில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

ஆனால் சிங்கப்பூர் நிறுவனத்துக்கும் இலங்கை தரப்புக்கும் மத்தியில் இந்த நடவடிக்கை சில காரணங்களினால்  தாமதிக்கப்பட்டிருந்தது. அதனால் இந்த விடயத்தில் நான் தலையிட்டேன். வழக்கு நடவடிக்கைகளுக்கான அறிக்கைகளை வழங்காமல் இருந்தன. கடந்த வருடம் செப்டம்பர் 23ஆம் திகதி இறுதி திகதி என கூறி, அறிக்கைகளை வழங்குமாறு கூறினேன். ஆனால் வழங்கவில்லை.

என்றாலும் குறித்த அறிக்கைகள் இந்த வருடம் ஜனவரி மாதம் வழங்கப்பட்டன. அதனை உடனடியாக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வழங்கினோம்.

இருந்தபோதும் இந்த நடவடிக்கையை தாமதப்படுத்த அல்லது வழக்கு தாக்கல் செய்யாமல் இருக்க காப்புறுதி நிறுவனம் ஒரு தரப்புக்கு இலஞ்சம் வழங்கி இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவல் உண்மையா பொய்யா என எனக்கு தெரியாது. ஒருவரின் லன்டன் கணக்கில் 250 மில்லயன் டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளதாக எனக்கு ஒருசில தினங்களுக்கு முன்னதாக தகவல் கிடைத்தது. இந்த தகவல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறேன்.

அத்துடன் அவ்வாறு யாருடையதாவது கணக்குக்கு பணம் சென்றுள்ளதா? யார் வைப்பிட்டுள்ளார் என்பதை விசாரணை செய்யுமாறு தெரிவித்துள்ளேன். அதன் பின்னரான விடயங்களை நாங்கள் கண்டுபிடிப்போம் என்றார்.

எக்ஸ்பிரஸ பேர்ள் கப்பல் தீப்பற்றி எரிந்தமையால் இலங்கை கடற்பரப்பு சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்துக்காக 6,2 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கவேண்டும் என சமுத்திர பாதுகாப்பு அதிகாரசபை நிபுணர்குழுவை நியமித்து தயாரித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: