எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் – மீனவர்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நீதியரசர்கள் முர்து பெர்னாண்டோ, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நான்கு பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நீர்கொழும்பு மற்றும் சிலாபத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என நீதிமன்றில் அறிவித்தார்.
இதற்கு பதிலளித்த சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த நிலையில் எவ்வித தாமதமும் இன்றி இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நீதியரசர் முர்து பெர்னாண்டோ அறிவித்தார்.
மேலும், மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அறிக்கையை செப்டம்பர் 15ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதேநேரம் இந்த மனுக்களை ஒக்டோபர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|