உலகிற்கு அமைதியும் சமாதானத்தையும் எடுத்துரைக்கும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம் இன்று – கிறிஸ்தவ மக்களுக்கு இலங்கையின் அரசியல் தலைவர்கள் வாழ்த்து!.

உலகிற்கு அமைதியும் சமாதானத்தையும் எடுத்துரைக்கும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று கொண்டாடுகின்றனர்.
நத்தார் பண்டிகையானது இயேசு கிறித்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25 ஆம் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், பிரதான நத்தார் ஆராதனை நேற்று இரவு 11.45 அளவில் கட்டான ஹல்பே புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தில் இடம்பெற்றது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் இந்த ஆராதனை நடைபெற்றது.
அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு நத்தார் தின ஆராதனைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், நேற்று இரவு வத்திக்கான் புனித பசிலிக்காவில் பாப்பரசர் பிரான்சிஸ் தலைமையில் நத்தார் ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, பல்வேறு சவால்கள் முன்நிற்கின்ற தருணத்தில் கொண்டாடப்படும் இந்த நத்தார் பண்டிகையைக் நாட்டிலுள்ள சவால்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொண்டு, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது நத்தார் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வறியவர்களுடன் ஒரு வேளை உண்ணுங்கள் என்ற விடயத்தை முன் நிறுத்தி, மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவைக் கொண்டாடும் நாம், ஒருபோதும் யதார்த்தத்தை மறக்க கூடாதெனவும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இயேசு கிறிஸ்து இருள் சூழ்ந்த இதயங்களுக்கு நித்திய ஒளியை தந்தார் உலகிற்கு பகிர்தல் என்ற தலைச்சிறந்த பாடத்தை கற்றுத்தந்தார் நத்தார் பண்டிகையை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து இன மக்களும் பேதமின்றி கொண்டாடுகின்றனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன் பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அமைதியை கொண்டுவருவதே நத்தார் பண்டிகையின் நோக்கம் எனவும் அவர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்
எல்லா இடங்களிலும் அந்தகார இருள் நீங்கிய நித்திய ஒளியும் நீடித்த சமாதானமும் நிலவட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் நத்தார் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வாழ்த்து செய்தியில்,..
அன்பின் வடிவாக, உலகத்தின் ஒளியாக கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்தார் என்ற ஆழ்மன விருப்பில் எமது மக்கள் கொண்டாடி மகிழும் நம்பிக்கைத்திருநாளே நத்தார் பெருநாள்,..எமது வயல் வெளிகள், கடல் எல்லை வளங்கள், மேச்சல் நிலங்கள், எமது மக்களின் ஆன்மீக வணக்கத்தலங்கள் எல்லாமே எமது முன்னோர்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வந்த எமது வரலாற்று வாழ்விடங்ளுக்கு சொந்தமானவை,..
இது எமக்கென்று வாக்களிக்கப்பட்ட எமது சொந்த பூமி,.. இதன் விடியலுக்காகாகவே நாமும் இங்கு வரவழைக்கப்பட்டவர்கள்,..எமது மக்களின் அவலங்கள் கண்டு, அழுகுரல் கேட்டு, இரத்தப்பலிகளின்இடர்கள் கண்டு நிரந்தர விடியலை நோக்கிய எமது இலட்சியப்பயணத்தின் வழிமுறையை நாம் மாற்றியவர்கள்,,
எவரையும் எவரும் அடிமை என்று கொள்ளாத, சரணடைவில்லாத சமாதானம், எல்லா மக்களும் சமன் என்ற சமவுரிமை,.. சமூக நீதி,..அன்பும் கருணையும் எமது மக்களை ஆளவல்ல நீதிச்சட்டம்,..இவைகளை அடைவதற்கே தீர்க்கதரிசனமாக எமது பாதையை நாம் மாற்றியவர்கள்,.வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் எமது தீர்க்கதரிசங்கள் ஒரு போதும் ஒழிந்து போகாது,..
எமது தீர்க்கதரிசனங்களை இழித்துரைத்தவர்கள் இத்தனை இரத்தப்பலிகளுக்கு பின்னரே மனந்திருந்தி எமது வழிக்கு வருவதாக கூறுகின்றனர்.சமாதானாத்தின் எதிரிகளாகவும், விடிந்தெழும் காலத்தின் விரோதிகளாகவும் இருந்து, கற்பாறைகளில் விதைக்க முனைந்தவர்களை எமது மக்கள் மன்னிப்பார்கள்,.. மறக்க மாட்டார்கள்,..
பசுந்தரைகளில் விதைத்தவர்களையே எமது மக்கள் தமது மீட்சிக்காக வரவழைக்கப்பட்டவர்கள் என படிப்படியாக இன்று ஏற்று வருகின்றார்கள்,.இரத்தப்பலிகளும் அவலக்குரல்களும் இல்லாத சமாதான சூழலுக்குள் நாம் எமது மக்களை அழைத்து வந்திருக்கிறோம்,,அதற்காக சமாதானத்தின் விரோதிளால், சமவுரிமையின் எதிரிகளால்
எம் மீதும் முள்முடிகள் சூடப்பட்டன,..பல தடவைகள் சிலுவையில் நானும் அறையப்பட்டேன்,..மறுபடி, மறுபடி,.பல தடவைகள் உயிர்த்தெழுந்து நான் மக்களாகிய உங்கள் மத்தியிலேயே இருக்கின்றேன்,எமது சத்திய நியாங்களையே வரலாறு இன்று சரியென்று ஏற்றிருக்கிறது,..
அதை ஏற்பது போல் எல்லோருமே வந்திருக்கிறார்கள்,.. ஆனாலும் மக்களாகிய நீங்கள் புறாக்களை போல் கபடமற்றவர்களாக இருப்பினும் சர்ப்பங்களை போல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,.. ஏனெனில் சமாதானத்தின் எதிரிகள் எல்லா இடங்களிலும் தோன்றுவார்கள்,அவர்கள் புறாக்களைப்போல் வேடமிட்டு உங்களிடம் வருவார்கள்,..
மீண்டும் உங்கள் வாழ்வின் மீது துயரச்சுமைகளை சுமத்த எத்தனிப்பார்கள். நல்லவர்கள் போல்நடித்து நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம்,
புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்குவார்கள். குழப்பங்களுக்கு தீர்வு காண எத்தனிக்காமால் குழப்பங்களை வைத்து கூச்சலிட்டு அடுத்த தேர்தலுக்கான அத்திவாரத்தை கட்டுவார்கள்,..
எமது யதார்த்த வழி மீதான விசுவாசத்தில் இனியும் உறுதியாயிருந்து, நீங்கள் விடிந்தெழும் காலத்திற்கு எதிரானாவர்களை எதிர்த்து நில்லுங்கள்,..நாம் நீதிச்சட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்கள், சாத்தான்கள் வேதம் ஓதட்டும்,
யதார்த்த வழி முறை மீது அவதூறுகளை பரப்பட்டும், ஆனாலும் நீதியின் பாதையில் நீங்கள் அணிதிரளும் போது அவர்களால் சமாதான விடியலை தடுக்க முடியாது ,..அன்பும் கருணையும் அவனியை ஆளட்டும்!,..அனைவருக்கும் நத்தார் தின வாழ்த்துக்காள்!,..
நித்திய ஒளி, நீடித்த சமவுரிமை,.. துயரச்சுமைகளை சுமந்த எமது மக்களுக்கு ஒரு நியாயத்தீர்ப்பு,.. இதுவே எமது இலட்சியம். இவ்வாறு நத்தார் வாழ்த்து செய்தியில்
அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் ஆகிய டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எம்மிடம் இருந்து விலகி நாம் அனைவரும் மகிழ்ச்சியோடும், திருப்தியோடும் வாழ இறைவன் எங்களுக்கு அருள வேண்டும் என தமது கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
000
Related posts:
|
|