உலகின் முன்னணி முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் நாடாக எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் – நீதி அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!

Monday, April 19th, 2021

உலகிலுள்ள முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் உகந்த நாடாக எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி உலகில் முதலீடு செய்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியிலில் 99 ஆவது இடத்தில் எமது நாடு இருக்கிறது. இந்த நிலையை மாற்றாவிடின் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியாத நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

துபாய், இந்தியாவின் குஷ்ராத் தென்கொரியாவின் சொன்டோர், மலேசியா லபுவான் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள நகரங்கள் எமக்கு போட்டியாக இருக்கும் வலயங்களாகும்.

இதேவேளை முதலீட்டாளர்களுக்கு பல்வேறு இடங்களுக்கு சென்று அனுமதி பெறும் சிக்கலான நிலைமை எமது நாட்டில் காணப்படுகிறது. துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தை எதிர்ப்பவர்களின் நோக்கம் எமது நாட்டுக்கு வரும் முதலீடுகளை வேறு நாடுகளுக்கு திருப்புவதேயாகும்.

இந்த முதலீட்டு வலயம் 269 ஹெக்டயார்களை கொண்டது. இதில் 91 ஹெக்டயார் பொது வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றை விற்க முடியாது. 116 ஹெக்டயார் திட்ட கம்பனிக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த கம்பனி 1.4 பில்லியன் டொலர் முதலீடு செய்து துறைமுக நகரத்தை உருவாக்கியது. பிரதிபலனை எதிர்பார்த்துத் தான் முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்கின்றனர். துறைமுக நகரில் 43 வீத பகுதியை குத்தகைக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

23 வீதமான பகுதி அரசுக்கு சொந்தமான பகுதியாகும். இருந்தாலும் மொத்த 100 வீதமான பகுதியும் அரசுக்கே சொந்தமானது.

துறைமுக நகரில் 43 வீதமான பிரதேசம் சீன கம்பனிக்கு 99 வருட குத்தகைக்கே வழங்கப்பட்டுள்ளது. 99 வருடங்களின் பின்னர் அதனை அவர்கள் மீள குத்தகை்கு வழங்குவதாக இருந்தாலும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி தேவை. துறைமுக நகரம் எமது கட்டுப்பாட்டிற்கு அப்பால் இருப்பதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் கிடையாது.

அதேநேரம் சீனா கம்பனிக்கு மாத்திரமே இங்கு முதலீடு செய்ய முடியும் என்பது பொய்யான குற்றச்சாட்டாகும். எவருக்கும் இங்கு முதலீடு செய்ய முடியும். ஹொங்கொங், சிங்கப்பூர், மொனாக்கோ, லக்சம்போர்க், கேமன் தீவு என பல நாடுகளில் இதே போன்றே செயற்பாடே இடம்பெறுகையில் இங்கு மாத்திரம் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்த துறைமுக நகரில் முழுமையாக எமது நாட்டு சட்டமே செயற்படுத்தப்படும். குற்றவியல் சட்டம், பொதுவான சட்டங்கள், இருதரப்பிற்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பிணக்கின் போது நீதிமன்றம் செல்லாது தீர்ப்பதற்கான சட்டம் என்பன அமுலில் இருக்கிறது. ஒப்பந்தத்துடன் தொடர்பற்ற பிரச்சினைகளை வாணிப நீதிமன்றத்திற்கும் சென்று தீர்க்க வாய்ப்புள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: