உரிமைகள் எவராலும் கொடுக்கப்பட வேண்டியவை அல்ல அது பெண்களிடம் இருக்க வேண்டியது – யாழ் மாவட்ட மகளிர் விவகார சம்மேளன தலைவி அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்து!

Tuesday, March 23rd, 2021

பெண்களுக்கான உரிமைகள் எவராலும் கொடுக்கப்பட வேண்டியவை அல்ல அது பெண்களிடம் இருக்க வேண்டியது ஒன்று என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மகளிர் விவகார குழுக்களின் சம்மேளனத் தலைவி திருமதி அனுசியா ஜெயகாந்த் இன்று நாம் எமது பெண்களை பெருமைப்படுதி இந்நாளை கொண்டாடுகின்ற இந்த வேளையில் எமது இனத்தின் உரிமைக்கான விடுதலைக்காக போராடிய பெண்களையும் நினைவுகூருவது அவசியமாகும்.

அந்தவகையில் எமது இனவிடுதலை போராட்டத்தில் களமாடி களமுனையில் மரணித்து, பெண்களாலும் எதுவும் சாதிக்க முடியும் என்று பெண்களுக்கு முகவரி கொடுத்து வீரகாவியமான முதலாவது ஈழத்து பெண் போராளி “சோபா”எனும் மதிவதனியையும் அவரது பாதையில் தொடர்ந்து பயணித்து எமது உரிமைக்கான இனவிடுதலை போராட்டத்தில் பல வரலாறுகள் படைத்த எண்ணற்ற பெண்களையும், உரிமைக்கான போராட்டத்தின் பெயரில் ராஜினி தரணகம, மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட பல நூறு பெண் ஆளுமைகளையும் இறுதி யுத்தத்தில் பலியாகிப் போன பெண்களையும் இந்த இடத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட வேண்டியதும் அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்யையதினம் நடைபெற்ற மாவட்ட மகளிர் தின நிகழ்வை தலைமைதாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

நான் இவ்வாறு கூறுவது அரசியல் அல்ல. அவ்வாறு எவரும் எண்ணிவிடவும் வேண்டாம். அது எமது பெண்களின் வரலாறு. அந்தவகையில் அவர்களது தியாகத்தையும் அவர்கள் விட்டுச் சென்ற வழித்தடங்களையும் அவர்களது அபிலாசைகளையும் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களாகிய நாம் ஏதோ ஒருவகையில் நனவாக்கி காட்ட வேண்டும்.

அந்தவகையில்“தலைமைத்துவத்தில் பெண்கள் ஒரு கொவிற் 19 உலகில் சமத்துவமான எதிர்காலத்தை அடைதல்” என்ற தொனிப் பொருளில் இந்த வருடத்தின் மகளிர் தினத்தை நாமும் கொண்டாடுகின்றோம்.

அத்துடன் மனித வாழ்வியலில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியத்துவமானது மட்டுமல்லாது மகத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கின்றது. அந்த மாண்பியலின் அடிப்படையில்தான் மகளிர் தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது என்றுமு; சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நமது நாட்டை பொறுத்தவரையில் 30 ஆண்டுகால போரினால் பல்வேறு நெருக்கடிகுக்கும் இடர்பாடுகளுக்கும் பெண்கள் சமுதாயமும் முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது.

யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரான இந்த காலகட்டத்தில் அந்த துர்ப்பாக்கிய நிலையிலிருந்து மீள வேண்டியதன் அவசியத்தை உய்த்துணர்ந்து கொண்டு பெண்களாகிய நாமும் முழுமையான பங்களிப்பை இந்த சமூகத்திற்கு வழங்கவேண்டியது காலத்தின் காட்டாய தேவையாக இருக்கின்றது.

அதேநேரம்  இன்றைய அரசியல் சூழலில் எமது நாட்டை பொறுத்தவரையில் உலகில் முதலாவது பெண் பிரதமரையும் ஜனாதிபதியையும் கொண்டிருந்ததாக நாம் பெருமைப்பட்டாலும் இன்று நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 5 வீதத்திற்கும் குறைவானதாகவே காணப்படுவது கூட ஒரு துரதிஸ்டவசமான விடயமாகவே நோக்கவேண்டும்.

எனவே எதிர்காலத்தில் வளமானதும் பாதுகாப்பானதுமானதும் கௌரவமானதுமான சமூகத்தையும் தேசத்தையும் கட்டியெழுப்புவதற்கு அரசியலில் பெண்களின் வகிபாகம் என்பது இன்றியமையாததாக இருக்கின்றது.

அத்துடன் எமது இளைய சமூகம் வழிதவறிப்போய் தவறான பாதையில் பயணிப்பதை தடுப்பதற்கு பெண்களாகிய நாமும் சரியான விழிப்புணர்வையும் சரியான நெறிப்படுத்தல்களையும் நாம் வாழும் சமூகத்தினதும் காலத்தின் தேவையையும் கருத்திற்கொண்டு இன, மத, மொழி வேறுபாடுகளை கடந்து அவர்களை நல்வழிப்படுத்தி நல்லொழுக்க சீலர்களாக வளர்த்தெடுக்க வேண்டிய கடப்பாட்டையும் பெண்களாகிய நாமும் ஏற்றுக்கொள் வேண்டும்.

அந்தவகையில் பெண்களுக்கான உரிமைகள் எவராலும் கொடுக்கப்பட வேண்டியவை அல்ல அது பெண்களிடம் இருக்க வேண்டியது ஒன்று என்று நாம் நினைவில் கொள்ள வேண்டும் எனறும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: