உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க துறைசார் பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம்!

Saturday, October 28th, 2023

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கல்வி அமைச்சர் உள்ளிட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதிமுதல் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையிலேயே பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் நேற்று முர்து பெர்னாண்டோ, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை விடுத்து, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரினார்.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி லக்ஷான் டயஸ் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை பரிசீலிக்க நவம்பர் 23ஆம் திகதிக்கு அழைப்பு விடுக்க உத்தரவிட்டது.

கனிஷ்க சந்தருவன் உள்ளிட்ட மூன்று உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: