உத்தியோகபூர்வ சீருடை குறித்த சுற்றுநிருபம் இரத்து!

Wednesday, June 26th, 2019

அரச சேவையாளர்களின் உத்தியோகபூர்வ சீருடை தொடர்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுநிருபத்தை இரத்துச் செய்ய நேற்றுக் கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரச நிர்வாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட, பலதரப்பட்ட காரணங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, ஆண் அரச சேவையாளர்கள் காற்சட்டை மற்றும் சேர்ட் அல்லது தேசிய ஆடையை அணிவதுடன், பெண் சேவையாளர்கள் சேலை, கண்டிய சேலை அல்லது அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் பொருத்தமான சீருடையை அணிந்திருக்க வேண்டும்.

அத்துடன், எப்பொழுதும் சேவையாளர்களின் முகம் தெளிவாக தெரியக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு தடை ஏற்படாத வகையிலான சீருடையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தில் அரச சேவையில் ஈடுபடும் ஆண்கள், காற்சட்டை, சேர்ட் மற்றும் தேசிய ஆடையை அணிவதுடன், பெண்கள் சேலை அல்லது கண்டிய சேலை அணிய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிருபம் தொடர்பில் அண்மையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அவதானம் செலுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் உள்விவகார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரட்ணசிறி குறித்து தெரிவுக்குழுவில் முன்னிலையான போது, அவரிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: