ஈ.பி.எப், ஈ.ரி.எப். வைப்புக்களில் முறைகேடு – இ.போ.ச. தேசிய ஊழியர் சங்கம் !

Sunday, April 1st, 2018

இலங்கை போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்க தொழிலாளர்களுக்கான ஈ.பி.எப், ஈ.ரி.எப் வைப்புக்களில் முறைகேடு நடக்;கின்றது என்று இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் உள்ளதாவது:

இந்த வைப்புகளின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டிய பல நன்மைகள் இல்லாமல் போகின்றன. தொழிலாளர்களது ஈ.பி.எப், ஈ.ரி.எப் ஆகியவற்றை சீர் செய்யாது அவற்றுக்குப் பொறுப்பான அதிகாரிகள் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் பெறுகின்றார்கள். சிலர் இரண்டு இடங்களில் கணக்காளர்களாகவும் பிராந்தியக் கணக்காளர் என்றும் இருந்து இந்தக் கொடுப்பனவுகளையும் இ.போ.ச வின் பல சலுகைகளையும் அனுபவித்து வருகின்றனர். தொழிலாளர்களது பிள்ளைகள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததற்கான ஈ.பி.எப் கொடுப்பனவும் இல்லாது இருக்கின்றனர்.

இலங்கையிலுள்ள அனைத்து அரச, தனியார் நிறுவன ஊழியர்கள் இந்த வைப்புக்களிலிருந்து மிகவும் பெறுமதியான சலுகைகளை பெறுகின்றனர். எமது ஊழியர்கள் இன்னும் பெறமுடியாது சிரமப்படுகின்றார்கள். ஓர் சாரதி காப்பாளர் சிறிய குற்றம் இழைத்தால் இடைநிறுத்தமும், இடமாற்றமும் வழங்கும் சபை ஏன் தொழிலாளர் உரிமையை கொடுக்க மறுக்கின்றது?

கொடுப்பனவுகளைச் சீர் செய்ய எமது பிராந்தியக் கணக்காளரோ எமது சாலைக் கணக்காளரோ முன்வர வேண்டும். இந்த கணக்குகள் 14 நாள்களுக்குள் சீர் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் பெரும் தொழிற் சங்க நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு ஈ.பி.எப் தொழிலாளர் ஆணையாளரான வீரக்கோன் அவர்களிடம் தொடர்பு கொண்டபோது எமது பணிகளை சரியான முறையில் செய்து உடனுக்குடன் அனுப்பி வைத்துக் கொண்டு இருக்கின்றோம் என்று பதிலளித்தார்.

Related posts: