ஈ – உள்ளுராட்சி என்னும் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ள உள்ளுராட்சி சபைகள்!

Thursday, August 9th, 2018

உள்ளுராட்சி சபைகளை ஈ – உள்ளுராட்சி என்னும் நிகழ்ச்சித் திட்டத்தினை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மேற்கொள்ளவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களால் மக்களுக்காக ஆற்றப்படுகின்ற சேவைகளை வினைத்திறனுடனும் மக்களுக்கு சாதகமானவாறும் மேற்கொள்வதற்காக தகவல் தொழில்நுட்பத்தை உச்ச அளவில் பயன்படுத்திக்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தொலைத்தொடர்புகள் டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன எனவும் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈ – உள்ளுராட்சி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களும் சம்பந்தப்படல் வேண்டும் என்பதால் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களும் ஈ – உள்ளுராட்சி முறைமையில் உள்ள பணிகளுக்குள் இணைய வேண்டும். இதற்கு மாற்று கணினி மென்பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களின் செயன்முறையை மீள் உருவாக்கல் அதற்குத் தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளுதல், உள்ளுராட்சி மன்றங்களில் பயன்படுத்துவதற்கென கணினி மென்பொருள் முறைமையொன்றை அறிமுகம் செய்தல், மக்களுக்கு சாதகமான சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்கு உள்ளுராட்சி மன்றங்களுக்கு முன்னரங்கு அலுவலகம் மற்றும் வாடிக்கையாளர் சேவை நிலையம் என்பவற்றை அறிமுகம் செய்தல், இணையத்தளம் மூலம் கொடுப்பனவு செய்யும் முறையை அறிமுகம் செய்தல், இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஊடாகச் சேவைகளை பெற்றுக்கொடுக்கும் வசதிகளை ஏற்படுத்தல், உள்ளுராட்சி மன்ற பதவியணியை பயிற்றுவித்தல் சகல உள்ளுராட்சி மன்றங்களையும் மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகங்கள் ஊடாக உள்ளுராட்சித் திணைக்களத்துடன் ஒருங்கிணைப்புச் செய்தல் மேலே குறிப்பிடப்பட்ட மாற்றங்களை மேற்கொள்வதற்கு உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவது மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு மாகாண மட்டத்தில் உள்ளுராட்சி அலகுகளை உள்ளுராட்சித் திணைக்களங்களை மையமாகக்கொண்டு நிறுவுதல், தேவையான முறைமைகளை மேம்படுத்தல் பேணி வருதல், மற்றும் பராமரிப்புச் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளல் போன்றவை உள்ளடக்கப்படுகின்றன. உரிய எல்லாச் சந்தர்ப்பத்திலும் இணையத்தளம் ஊடாக கொடுப்பனவுகளை செலுத்தல், இணையத்தளம் ஊடாக சேவைகளுக்கு விண்ணப்பித்தல், இணையத்தளம் ஊடாக தகவல்களைப்பெற்றுக் கொடுத்தல், மற்றும் பெற்றுக்கொள்ளல்  2006 இன்  19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம் மற்றும் அதற்குச் சமாந்தரமாக வெளியிடப்பட்டுள்ள 447 ஆம் இலக்க நிதிச் சுற்றறிக்கை மூலம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய உள்ளுராட்சி மன்றங்களும் தமது சேவைகள் மற்றும் தகவல்களைப்பெற்றுக்கொள்ளல் மற்றும் கொடுப்பனவுகளை இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளும் வாய்ப்பைத் தமது மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.

என மாகாண சபைகள் உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலர் கமல் பத்மசிறி சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: