இலங்கை மகளிர் ரக்பி அணித் தலைவி தென்கொரியாவில் மாயம் !

Monday, November 14th, 2022

ஆசிய எழுவர் கொண்ட ரக்பி போட்டியில் பங்கேற்பதற்காக தென்கொரியா சென்ற இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவி துலானி பல்லேகொண்டகே இன்று (14) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றையதினம் (13) போட்டியில் கலந்து கொண்ட பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரக்பி அணியின் முகாமையாளர், தனது அணியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் கொரிய ரக்பி சங்க அதிகாரிகள் ஊடாக காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, இஞ்சியோனில் உள்ள நம்டோங் (Incheon – Namdong) காவல்துறையினர் மகளிர் அணித் தலைவியை கண்டுபிடிக்க விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இந்தநிலையில், போட்டிகளில் கலந்து கொண்ட இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் ரக்பி அணிகள் இன்று (14) முற்பகல் 11.30 மணியளவில் இன்சியான் விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு புறப்படவுள்ளன.

இலங்கை ரக்பி அணிகள் நாட்டை விட்டு வெளியேறும் முன் துலானியை கண்டுபிடிக்க தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வோம் என தென் கொரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: