இலங்கை கடற்படைக்கு 3 பில்லியன் ரூபா வருமானம்!

Monday, March 27th, 2017

கரையோர பாதுகாப்பு சேவைகளை வழங்கியதன் மூலம் காலி துறைமுக வலயத்திலிருந்து மட்டும் ஒரு வருடத்திற்குள் மூன்று பில்லியன் ரூபா வருமானத்தை இலங்கை கடற்படை பெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கப்பல் சார்ந்த மற்றும் கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளை பொறுப்பேற்றதன் பின்னர் காலி துறைமுக வலயத்திலிருந்து மட்டும், இதுவரை மூன்று பில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.

2015ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதியிலிருந்து இலங்கை கடற்படை ஆயுத களஞ்சியம் அவற்றின் கடல்சார் போக்குவரத்து, வெளிநாட்டு மற்றும் உள்ளுர் பாதுகாப்பு குழுக்களின் கடல் போக்குவரத்து மற்றும் வர்த்தக கப்பல்களின் கரையோர போக்குவரத்து ஆகியவற்றுக்கு பாதுகாப்பை வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கை சாதாரணமாக முன்னெடுக்கப்படும் ஏனைய கரையோர பாதுகாப்பு நடவடிக்கைக்கு மேலதிகமாக முன்னெடுக்கப்பட்ட சேவையாகும் என்று இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பணிப்புரையின் கீழ், இலங்கை கடற்படை கரையோர, கப்பல் சார்ந்த பாதுகாப்பு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டது. இதன்மூலம் பெறப்பட்ட வருமானம் நேரடியாக அரசாங்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்தின் போது பாதுகாப்பையும் இலங்கையின் நீர் வள பரம்பலுக்கான பாதுகாப்பையும் கடற்படை மேலதிக பொறுப்பாக ஏற்று செயற்பட்டு வருகிறது. காலி பிரதான இயக்க கட்டுப்பாட்டு மையத்திலிருந்து எட்டாயிரத்து 181 கப்பல்கள் இதுவரை பயணித்துள்ளன. இதன்மூலம் இந்த வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: