இலங்கையுடன் தொடர்புபட்ட எந்தவொரு மூன்றாம் தரப்பினர் சார்ந்த விடயங்களிலும் தலையிட வேண்டாம் – மெரிக்கா ஜப்பான் நாடுகளுக்கு இலங்கை அறிவிப்பு!

Tuesday, October 3rd, 2023

இலங்கையுடன் தொடர்புபட்ட எந்தவொரு மூன்றாம் தரப்பினர் சார்ந்த விடயங்களிலும் தலையிட வேண்டாம் என இலங்கை அரசாங்கம், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலங்கை அறிவித்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் தாம் தொடர்புபட்ட சொந்த புவிசார் அரசியல் கரிசனைகள் அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இருக்குமாயின், அது தொடர்பாக தம்முடன் நேரடியாக கலந்துரையாட முடியும் எனவும் இலங்கை வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் மேற்குலக நட்பு நாடுகள், ஆசிய பசுபிக் பிராந்தியத்தை மையப்படுத்த எதிர்கால மூலோபாயத் திட்டங்களை வகுத்துள்ளன.

இந்து சமுத்திரத்தைப் பொறுத்தவரை அமைவிட முக்கியத்துவத்தின் அடிப்படையில் உலகின் அதிகாரமிக்க நாடுகளின் அதிகார போட்டி இடம்பெறும் நாடாக இலங்கை மாறியுள்ளது.

அந்த வகையில் இலங்கை மீது சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டையே அமெரிக்கா மற்றும் அதன் மேற்குலக நட்பு நாடுகள் மாத்திரமல்லாமல், இந்தியாவும் கொண்டுள்ளது.

இந்த நிலையில் சொந்த கரிசனை அற்ற, மூன்றாம் தரப்பு தொடர்புபட்ட விடயங்களில் தலையீடு செய்வதை தவிர்க்குமாறு அண்மையில் இடம்பெற்ற அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள துணை செயலாளர் விக்ரோரியா நூலண்ட் உள்ளிட்ட பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி எடுத்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா பொதுச் சபை அமர்வின் பக்க சந்திப்புக்களில் அலி சப்ரி இரு தரப்பு பேச்சுக்களை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது எந்தவொரு சம்பந்தப்பட்ட நாடுகள் அவர்கள் தொடர்புபட்ட கரிசனைகளை நேரடியாக தெரிவிக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி கேட்டுக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷி யாங் 6’ என்ற சீன ஆராய்ச்சிக் கப்பலின் திட்டமிட்ட விஜயம் தொடர்பாக இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முத்தரப்பு அழுத்தங்களை இலங்கை எதிர்கொண்டுள்ளது.

நவம்பர் மாதம் வரை கப்பல் பயணத்தை ஒத்திவைக்க அரசாங்கம் விரும்பினாலும், ஒக்டோபரில் கப்பல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என சீனா வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: