இலங்கையில் கொரோனா மரணம் 107 ஆக உயர்வு!

Saturday, November 28th, 2020

நாட்டில் நேற்று எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, கொழும்பு-13 பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய பெண் கடந்த 23ஆம் திகதி உயிரிழந்தார்.

இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றுடனான பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஆகியன மரணத்திற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, கொழும்பு-தெமடகொடவைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் மஹரகம அபோக்சஹா மருத்துவமனையில் இருந்து ஹோமாகம ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். அவருக்கு புற்றுநோய் உள்ளதுடன் கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.

இதனைவிட, மருதானையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் கடந்த 25ஆம் திகதி அவரது வீட்டில் காலமானார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுடன் மாரடைப்பு ஏற்பட்டமையே உயிரிழப்புக்குக் காரணமாகும்.

மேலும், கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 36 வயது ஆணொருவரும் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணம் நீண்ட நாள் நுரையீரல் நோயுடன் கொரோனா தொற்று ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பைச் சேர்ந்த 83 வயது ஆணொருவர் நேற்று 26ஆம் திகதி வீட்டில் உயிரிழந்தார். இவரது இறப்புக்கான காரணம் கொரோனா வைரஸ் தொற்றுடன் மாரடைப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு-மாளிகாவத்தையைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் அவரது வீட்டில் நேற்று உயிரிழந்தார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் நீரிழிவு நோய், நீண்டகால சிறுநீரக நோயுடன் கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஏற்பட்ட மாரடைப்பே மரணத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.

மேலும், கொழும்பு-13 பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் கடந்த 25ஆம் திகதி அவரது வீட்டில் உயிரிழந்தார். இவரது மரணத்துக்கான காரணம், நாட்பட்ட நோய் மற்றும் கொரோனா தொற்று நிமோனியா நிலை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 70 வயது ஆண் கைதியொருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவரது உயிரிழப்புக்கு, கொரோனா தொற்றுடன் அதிகரித்த சிறுநீரக நோய்த்தொற்று காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது.

Related posts: