இலங்கையின் முடக்கநிலை தளர்த்தப்பட்டதன் விளைவு 14 நாட்களுக்கு பின்னரே தெரியும் – சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் எச்சரிக்கை!

Thursday, May 14th, 2020

இலங்கையில் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட சுகாதாரத்தரப்பினரது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் விளைவை 14 நாட்களின் எதிர்கொள்ளலாமென சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் பாதுகாப்பானவை அல்ல. குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறிய அனைவருக்கும் பாரிசோதிக்கப்பட வேண்டும். அதன் ஊடாகவே கொரோனா பாதிப்பு தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு தொற்றவில்லை என்பதை 100 வீதம் உறுதியாக கூற முடியும் எனவும் நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் 14 நாட்களின் பின்னர் அடையாளம் காணப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் அதற்கு காரணம் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் தளர்வே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 23 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்தப்பட்டிருப்பதுடன், இரு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாமல் உள்ளது.

இதனால் உண்டாகும் சாதக, பாதகங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் உலகில் பல நாடுகளில் முடக்கநிலை தளர்த்தப்படும்போது 2ஆம் அலையின் தாக்கம் அதிகளவில் உணரப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக சீனாவின் வூகான் மாகாணத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் உணரப்பட்டிருக்கின்றது. எனவே இலங்கையிலும் அவ்வாறான ஆபத்துள்ளது.

குறிப்பாக சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்க 2ஆம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆகவே தாக்கம் ஏற்படலாம் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்கின்றார்கள். மருத்துவர்களை பொறுத்தளவில் கட்டுப்பாடு தளர்வு ஆபத்தானது.

ஆனால் மருத்துவர்களின் கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டிருக்க முடியாது. காரணம் கொரோனா இடர்காலத்தில் வேறு பல பாதிப்புக்கள் உள்ளன. அதனடிப்படையிலேயே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றது.

ஆனாலும் இதன் விளைவை உடனடியாக உணர்ந்து கொள்ள முடியாது. 14 நாட்களின் பின்பே உணர முடியும் எனவும் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

Related posts: