இலங்கையின் கடற்றொழிற்றுறைக்கு ஜப்பான் உதவி
Wednesday, September 27th, 2017
இலங்கையிலிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீனின் எடையை அதிகரிப்பதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று ஜப்பான் வெளிவிவகார இராஜங்க அமைச்சர் மஸஹிஸா சாட்டோவுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் போது ஜப்பான் வெளிவிவகார இராஜங்க அமைச்சர் மஸஹிஸா சாட்டோ இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வருடாந்தம் 100 மெற்றிக் தொன் ரூனா மீனை இலங்கையிடம் இருந்து கொள்வனவு செய்கிறது. இலங்கை ஏற்றுமதி செய்யும் மீன் தொகையில் 12 சதவீதமானவற்றை ஜப்பான் கொள்வனவு செய்கிறது. விசேடமாக சூரை மீனைப் பயன்படுத்தி ஜப்பானிய மக்களின் பாரம்பரிய உணவான சுசி மற்றும் சசிமி ஆகியவற்றைத் தயாரித்து இலங்கை ஏற்றுமதி செய்கிறது.
இலங்கையின் சூரை மீன் கிலோ ஒன்றை ஜப்பான் தற்போது 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து கொள்வனவு செய்கிறது.
இந்த ஏற்றுமதி நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர ஜப்பானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜப்பானிய வெளிவிகார இராஜங்க அமைச்சர் இலங்கையின் கடற்றொழில் துறையின் வளர்ச்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


