இரண்டாவது தடவையாகவும் நெடுந்தீவு பிரதேச சபை உதவித்தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tuesday, June 26th, 2018

நெடுந்தீவு பிரதேச சபையின் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட சண்முகம் லோகேஸ்வரன் காலமான நிலையில் குறித்த பிரதேச சபையில் நிலவிவந்த உபதவிசாளர் வெற்றிடத் தெரிவு  சபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் புறக்கணித்தமையால் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபைக்காக உப தவிசாளர் பதவி வெற்றிடத்துக்கு வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் மீண்டும் இன்று காலை தெரிவு நடக்க இருந்தது.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் வடக்கில் பல சபைகள் தொங்கு நிலையில் காணப்பட்ட நிலையில் குறித்த நெடுந்தீவு பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அதிக ஆசனங்களை பெற்றிருந்த போதிலும் சுயேட்சைக் குழுக்களின்  ஆதரவுடன் நெடுந்தீவு பிரதேச சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு  கைப்பற்றியிருந்த நிலையில் சபையின் நடவடிக்கைகள் மக்கள் நலன் கருதியதாக அமையவில்லை என்றும் தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகின்றார் என்றும் தெரிவித்து குறித்த சபையிலிருந்து ஏற்கனவே கடந்த சபை அமர்வை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெளிநடப்பு செய்திருந்தது.

இந்நிலையில் இன்றையதினமும் நெடுந்தீவு பிரதேச சபையை பிரதிநித்தித்துவப்படுத்தும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் 6 பேரும்  சபையின் செயற்பாடுகளில் உள்ள செயற்றிறனின்மை மற்றும் தன்னிச்சையான முடிவுகள் போன்ற காரணத்தை முன்வைத்து வெளிநடப்பு செய்தது. இதே போன்று சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் இருவரும் சபையை புறக்கணித்திருந்தனர்.

இதன் காரணமாக குறித்த சபையின் உதவி தவிசாளர் தெரிவு மேற்கொள்ளமுடியாது போனதால் சபையின்  உபதவிசாளர் தெரிவை உள்ளூராட்சி ஆணையாளர் ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: