இன்றுமுதல் ஆணையர்கள் மற்றும் செயலாளர்களின் தலைமைல் பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை முன்னெடுக்கும் – இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவிப்பு!

Monday, March 20th, 2023

இன்று 20 ஆம் திகதிமுதல் உள்ளூராட்சி நிறுவனங்கள் பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை ஆணையர்கள் மற்றும் செயலாளர்களின் தலைமையின் கீழ் வழங்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் கடந்த நள்ளிரவுடன் நிறைவடைந்தது. அதன்படி, அந்த நிறுவனங்களின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்றுமுதல் ஆணையர்கள் மற்றும் செயலாளர்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் அந்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி ஆரம்பமானது.

எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கு மட்டும் தனித் தேர்தல் நடத்தப்பட்டதன் காரணமாக, அதன் உத்தியோகபூர்வ பதவிக்காலம் 2018 ஒக்டோபர் மாதம் ஆரம்பமானது.

அரசியலமைப்பின் பிரகாரம் 340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நான்கு வருட காலத்திற்குப் பின்னர் கடந்த வருடம் மார்ச் மாதம் 20ஆம் திகதியுடன் முடிவடையவிருந்தது. தனது அதிகாரத்தின் பிரகாரம் பதவிக்காலத்தை ஒரு வருடத்திற்கு நீடிக்க விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதன்படி அந்த 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

அந்த நிறுவனங்களின் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்பதாலும், இதுவரை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறாததாலும், உள்ளூராட்சி நிறுவனங்கள் அரசு அதிகாரிகளின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 29 மாநகர சபைகளின் அதிகாரம் மாநகர ஆணையாளர்களின் கீழும், 36 நகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் அந்த நிறுவனங்களின் செயலாளர்களின் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதேநேரம் எல்பிட்டிய உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 93 கைதிகளுக்கு இன்று விடுதலை - சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெ...
நாளைமுதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம் - புகையிரதத் திணைக்களம் அறிவிப்...
இலங்கை – நேபாளம் இடையே வர்த்தகம், கல்வித்துறை, சுற்றுலாத்துறை, முதலீட்டு வாய்ப்புகள் குறித்து காத்தண...