இன்புளுவன்ஸா வைரசுக்கான மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Thursday, May 31st, 2018

தென் மாகாணத்தில் இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில் அதன் சிகிச்சைக்காக இன்புளுவன்சா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரமிபுளு மருந்துகளுக்கு வைத்தியசாலைகளில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது பற்றி அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் ஊடகத் தரப்புக்கு தெரிவித்துள்ள தகவலில் இன்புளுவன்சா சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரமிபுளு மருந்துகளை பெரும்பாலான வைத்தியசாலைகளில் நோயாளிகள் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரமிபுளு மருந்துகளை சுகாதார அமைச்சு வைத்தியசாலைகளுக்கு வழங்குவதற்கு உடனே நடவடிக்கை மேற்கொள்ளாது விட்டால் நோயாளிகளின் உயிரிழப்புக்கள் அதிகரிக்கக்கூடும்.

இந்த இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சல் தென் மாகாணத்தில் பரவத் தொடங்கி இரண்டு மாதங்களாகிவிட்ட நிலையிலும் அதன் சிகிச்சைகளுக்கான ரமிபுளு மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு போதியளவு இதுவரை வழங்கவில்லை. இன்புளுவன்சா மற்றும் ஆபத்தான வைரஸ் தொற்று நோய்கள் நாட்டில் பரவியுள்ள இந்த நிலையில் சுகாதார அமைச்சரும் சுகாதார சேவைகள் பணிப்பாளரும் நாட்டில் இருக்கவில்லை எனவும் அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: