இந்திய நிவாரண பொதிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம் – தீவகம் உள்ளிட்ட 5 பிரதேச செயலர் பிரிவுகளில் வாழும் 100 வீத மக்களுக்கும் வழங்கவும் நடவடிக்கை!
Monday, May 30th, 2022
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்த நிவாரணப் பொதிகள் சம்பிரதாயபூர்வமாக பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் சம்பிரதாயபூர்வமாக நிவாரணப் பொதியை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், இந்திய துணை தூதரக அதிகாரிகள், பிரதேச செயலர்கள் கிராம சேவகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் உதவி பொருட்களை பெற்றுக்கொண்டபின் கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கூறுகையில் –
இன்றையதினம் ஒரு தொகுதி அரிசியும் பால்மாவும் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளன. எமது பகுதிக்கு ஒரு மில்லியன் கிலோகிராம் அரிசியும் 7500 கிலோகிராம் பால்மாவும் இந்த இந்திய உதவித் திட்டத்தினூடாக கிடைக்கவுள்ளது.
அதனடிப்படையில் ஒருதொகுதி பொதிகள் இன்று காலை 10 புகையிர பெண்டிகளில் 8 ஆயிரத்து 755 பொதிகள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் 45 ஆயிரம் கிலோகிராம் அரிசியும் 7 ஆயிரத்து 500 கிலோ கிராம் பால்மாவும் கிடைத்துள்ளது.
கிடைக்கப்பெற்ற இந்த பொதிகளை மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு இன்றிலிருந்து பயனாளர்களுக்கு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று எஞ்சிய பொதிகள் 2 ஆம் கட்டமாக 11 ஆயிரத்து 225 பொதிகள் சில தினங்களுக்குள் யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கப்பெறும். இதனூடாகயாழ் மாவட்டத்தில் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்படவுள்ளது.
அத்துடன் இந்த உதவியை இன்றைய காலகட்டத்தில் வழங்கிய தமிழ் நாட்டு மக்களுக்கும் இந்திய அரசுக்கும் நன்றி தெரிவித்த மாவட்ட அரச அதிபர் இந்த உதவி வழங்கலில் கிடைக்கப்பெற்ற பொதிகளில் யாழ் மாவட்டத்தின் வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு காரைநகர் மற்றும் மருதங்கேணி ஆகிய பகுதி மக்களுக்கு 100 வீத வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் கூறுகையில் –
இந்திய மத்திய அரசாக இருந்தாலும் தமிழக அரசாக இருந்தாலும் யாழ்ப்பாண மக்களுக்கு தொடர்ந்தும் உதவி செய்வதற்கு தயாராக இருக்கின்ற நிலையில் அதனை நாம் பெற்றுக் கொடுக்க தயாராக இருக்கிறோம்.
தற்போது இந்தியா தமிழ்நாடு அரசின் நிவாரண பொருட்கள் இலங்கையிலுள்ள பல பாகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் குறித்த உதவிப் பொருட்கள் வந்தடைந்தது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் யாழ் போதனா வைத்தியசாலையில் நிலவும் அத்தியாவசிய மருந்துத் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மருந்துப் பொருட்களை எடுத்து வரப்பட்டுள்ளன.
தீவக மக்களுக்கு தேவையான சில விடயங்களை கடந்த விஜயத்தின்போது பிரதேச செயலாளர்கள் எமக்குத் தெரியப்படுத்தியிருந்தனர் அதனை நாம் கருத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் யாழ் வாழ் மக்களுக்கு என்றும் உதவி வழங்க தயாராக இருப்பதோடு முதற்கட்டமாக ஒரு பகுதி உலர் உணவுகளை யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டுள்ளது.
ஆகவே இந்திய அரசு யாழ் மாவட்ட மக்களுக்கு தொடர்ந்தும் உதவி செய்வதற்கு தயாராக இருப்பதோடு எடுத்த கட்ட உணவுப் பொதிகளை வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
000
Related posts:
|
|
|


