இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் – பாரதப் பிரதமர் மோடி நிதி அமைச்சர் பசில் ரஜபக்சவிடம் உறுதி!

Thursday, March 17th, 2022

இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமருக்கும் இலங்கை நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு குறித்து புதுடில்லிக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் நிதியமைச்சர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தவேளை இந்தியா தனது நெருக்கமான அயல்நாடான இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக விளங்கும் செயற்படும் என தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பரில் தான் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை குறுகியகால நடுத்தர கால பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து ஏற்பட்ட இணக்கப்பாடுகள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்திய பிரதமருக்கும் இலங்கை நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இந்திய பிரதமரின் நாடாளுமன்ற இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பு மிகவும் சுமுகமான சூழ்நிலையில் இடம்பெற்றது.

ஆரம்பத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மிக நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு வழங்கிய உதவிகளிற்காக இந்திய பிரதமருக்கு நன்றியை தெரிவித்தார். அதன் பின்னர் நெருக்கமான நண்பனாக இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் என இந்திய பிரதமர் உறுதிமொழி வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது இருவரும் இருநாடுகளின் உறவுகளுடன் தொடர்புபட்ட பல்வேறுபட்ட விவகாரங்கள் குறித்து ஆராய்ந்தனர். விவசாயம், மீள்புதுப்பித்தக்க சக்தி, டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலாத்துறை, மீன்பிடித்துறை, உட்பட பல துறைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

மீள்புதுப்பிக்கும் எரிசக்தி அபிவிருத்தியில் கவனம் செலுத்துவது பரஸ்பர நன்மையளிக்ககூடிய விடயம் என்பதை இரு பிரமுகர்களும் ஏற்றுக்கொண்டதுடன் அதனை தீவிரமாக முன்னெடுக்கவேண்டும் எனவும் இணங்கினார்கள்.

தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டைகளை உருவாக்குவதில் இந்தியாவிற்கு உள்ள நிபுணத்துவம், அதேபோன்ற இலங்கை அரசாங்கத்தின் திட்டமொன்றிற்கான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.அவ்வாறான அடையாள அட்டை சாதாரண மக்கள் பல்வேறுபட்ட சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதியாக விளங்கும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கையில் இராமாயண பயணத்தையும் இந்தியாவில் பௌத்த சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பேசப்பட்டது. குறிப்பாக பெருமளவு இந்திய சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு கவர்ந்திழுப்பதற்கு இதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

இந்த சூழமைவில் 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கும் குஜராத் மாநிலத்திற்கும் இடையில் கைச்சாத்தான சுற்றுலாத்துறை தொடர்பான புரிந்துணர்வு குறித்து விசேடமாக சுட்டிக்காட்டப்பட்டது. இது மாநில அளவில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உதவக்கூடும்.

இருநாடுகளிற்கும் இடையிலான மீன்பிடித்துறை விவகாரம் குறித்து பிரதமர் மோடியும் அமைச்சர் பசில் ராஜபக்சவும் முழுமையான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

அந்த விவகாரத்தின் குழப்பமான பல்பரிமாண தன்மையை ஏற்றுக்கொண்ட அவர்கள் மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் நடத்துவது,வாழ்வாதாரம், சூழல் மற்றும் சமுத்திரம், சட்டத்தை அமுல்படுத்துதல்,கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை விரைவாக விடுவித்தல் குறித்தும் ஏற்றுக்கொண்டனர்.

இரு பிரதிநிதிகளும் இந்த குழப்பகரமான விடயத்திற்கு கூடிய விரைவில் தீர்வை காணவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டனர். இந்திய பிரதமரும் இலங்கை அமைச்சரும் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்லும் இலங்கையின் தீர்மானம் குறித்து ஆராய்ந்தனர்.

பிரதமர் நரேந்திரமோடி இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து சுட்டிக்காட்டியதுடன் இது தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் உத்திகளை உருவாக்குவதில் இந்தியாவின் அனுபவம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இலங்கையின் நிதியமைச்சருடன் ஒரு நல்ல சந்திப்பு நடைபெறற்றது. நமது பொருளாதார கூட்டாண்மை வலுவடைவதையும், இந்தியாவில் இருந்து முதலீடுகள் வளர்ச்சியடைவதையும் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: