ஆசிரிய இடமாற்றக் கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளன – ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளது இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!
Friday, December 21st, 2018
வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றக்கொள்கையில் புதிய நடைமுறைகளை உள்ளடக்கி அதன்படி இடமாற்றங்கள் வழங்க நடவடிக்கை எடுங்கள் என்று வடக்கு மாகாண ஆளுநரிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். விடுதிகள் சீரின்மை, போக்குவரத்துச் சீரின்மை, பாதுகாப்புச் சீரின்மை முதலிய பிரச்சினைகள் சீர்படுத்தப்படவில்லை. அவ்வாறிருக்கையில் கஷ்ட, அதி கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கைவிரல் அடையாள இயந்திரங்களைப் பொருத்தி அங்கு பணியாற்றும் ஆசிரியர்களையும் அதிபர்களையும் விரக்தி நிலைக்குத் தள்ளியுள்ளனர்.
வசதிகள் அற்ற பாடசாலையில் அந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வரை அவற்றை அகற்றுங்கள் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. சாதகமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் உறுதியளித்திருந்தார்.
அதிகாரிகளும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் இடமாற்றச் சபையில் முறைகேடாக நடந்து கொள்கின்றனர். தேசிய ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு முரணாக மாகாணத்துக்கு நிலையான கொள்கையில்லாமல் பக்கச்சார்பாக இடமாற்றம் நடைபெறுவதால் ஆசிரியர்கள் உள ரீதியாகப் பாதிப்படைந்துள்ளனர்.
தவறான முடிவெடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். ஆத்ம திருப்தியுடன் கற்றல் கற்பித்தலில் முழு மனத்துடன் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர். விரைவில் தொழிற்சங்க உதவியுடன் கொள்கையொன்றைத் தயாரிக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு ஆளுநர் பணித்துள்ளார்.
முதல் நியமனம் வழங்கும்போது அனைத்து ஆசிரியர்களும் தமது சொந்த விதிவிட மாவட்டத்தை விடுத்து வெளிமாவட்டத்துக்கு நியமனம் வழங்குமாறும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் வலியுறுத்தியது. அதற்கும் ஆளுநர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


