அழுத்தம் கொடுக்கும் பரப்புரை வேண்டாம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் !

Saturday, January 20th, 2018

மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் பரப்புரைகளை முன்னெடுக்க வேண்டாம். அதிகாரத்தில் உள்ளவர்களும் தேர்தல் சட்டத்தை மீறாது செயற்பட வேண்டும்.என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவித்ததாவது:

வாக்காளர் அட்டைகளை உரிய இடங்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். அரசியல் கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி தேர்தல் சட்டங்களை மீற வேண்டாம் என்பதை நாம் ஆரம்பத்தில் இருந்தே கூறுகின்றோம். அதேபோல் அரச சொத்துக்களை பயன்படுத்தவோ அல்லது முறைகேடாகவோ பயன்படுத்த வேண்டாம். அதேபோல் மக்களும் பொருள்களை வாங்கும் நோக்கத்தில் சொற்ப தேவைகளுக்காக வாக்களிக்கவும் வேண்டாம். மக்களும் தேர்தல் சட்டத்தைச் சரியாகக் கையாள வேண்டும்.

தேர்தல் ஊழல் இடம்பெற்று வருகின்றது என்பதை நாம் மறுக்கவில்லை. கடந்த காலங்களில் இருந்து தேர்தல் ஊழல் இடம்பெற்று வருகின்றது. இப்போது ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்கள் எதிர்கால நகர்வுகளில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களில் எமது வருங்கால சந்ததி சரியான தேர்தல் முறைமையின் கீழ் வழிநடத்தப்படும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. அந்தப் பொறுப்பு எம் அனைவரிடமும் உள்ளது. மக்களுக்கு அழுத்தம் கொடுத்து வாக்குகளை எவரும் பெற்றுக் கொள்ள வேண்டாம். மக்களைச் சிந்தித்துச் செயற்படுத்தும் கால எல்லையை வழங்க வேண்டும். அதற்கு அரசியல் கட்சிகள் அதிகாரத்தில் உள்ள நபர்கள் இடமளிக்க வேண்டும். அதுவே மக்களாட்சித் தேர்தல் சுதந்திரம் என்று கருதுகின்றோம். இவ்வாறான கலாசாரத்தில் இருந்து மீள வேண்டும் என்றால் அனைவரும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். இது மனித உரிமைகளில் ஒன்றாகும். அதை தடுப்பதும் மனித உரிமை மீறலாகும் என்றார்.

Related posts: