அரிசியின் கட்டுப்பாட்டு விலைகள் மீறப்படுவதாக முறைப்பாடு!

Friday, August 11th, 2017

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அரிசிக்கான உச்சபட்ச விலைகளை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ள போதிலும் அரிசி வியாபாரிகள் அதை உதாசீனம்செய்து தமது விற்பனை விலைகளை அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அரசு நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலைகளின்படி உள்நாட்டு சம்பா 90 ரூபாவிற்கும், இறக்குமதி செய்யப்பட்ட சம்பா 80 ரூபாவிற்கும், உள்நாட்டு நாட்டரிசி 80 ரூபாவிற்கும், இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி 75 ரூபாவிற்கும், உள்நாட்டு பச்சரிசி 78 ரூபாவிற்கும், இறக்குமதி செய்யப்பட்ட பச்சரிசி 65 ரூபாவிற்கும் விற்கப்பட வேண்டும்.

எனினும், வியாபாரிகள் சகல அரிசிகளையும் 90 ரூபா தொடக்கம் 105 ரூபா வரை விற்று வருகிறார்கள் எனவும் பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அரிசி வியாபாரிகள் சங்கம், இறக்குமதி செய்யப்பட்ட அரிசிகளை அரசு நிர்ணயித்துள்ள விலைகளுக்கு விற்க முடியுமென்றாலும் மக்கள் அவற்றை வாங்குவதற்குத் தயக்கம் காட்டுகிறார்கள் எனவும், உள்நாட்டு அரிசிகளை கட்டுப்பாட்டு விலைகளுக்கு விற்க முடியாதெனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விளக்கமளித்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, நிர்ணயிக்கப்பட்ட விலைகளுக்கு அதிகமாக விற்பனை செய்யும் வியாபாரிகளையும், இறக்குமதியாளர்களையும், விநியோகத்தர்களையும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் சுற்றிவளைப்புகள் நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

Related posts: