அரச வங்கிக் கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடிய எத்தகைய சூழ்நிலையும் நாட்டில் காணப்படவில்லை – அரச வங்கித்துறை பலமாகவே இருக்கிறது என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Sunday, March 27th, 2022

அரச வங்கிக் கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடிய எத்தகைய சூழ்நிலையும் நாட்டில் காணப்படவில்லை. அரச வங்கிகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு வரும் விமர்சனங்கள் அடிப்படையற்றவை. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை வீழ்ச்சியுற செய்யும் வகையில் முன்னெடுக்கப்படும் இத்தகைய விமர்சனங்கள் தொடர்பில் கவலையடைவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண நேற்று தெரிவித்துள்ளார்.

பொது ஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு நேற்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –

அரச வங்கிக் கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடிய எத்தகைய சூழ்நிலையும் நாட்டில் காணப்படவில்லை. அரசாங்கத்தின் சார்பில் பொறுப்புடன் இதனைக் கூறமுடியும். அதேவேளை நாட்டின் வங்கித்துறை எத்தகைய சிக்கலுமின்றி பலமாகவும் பாதுகாப்புடனும் காணப்படுகிறதென்பதை நாம் நாட்டு மக்களுக்குப் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி நீண்ட காலமாக தொடரும் பிரச்சினையாகும். கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் சூழ்நிலை பாதிப்போடு அந்த நெருக்கடி இந்த வருடத்தில் தலைதூக்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை வைத்துக்கொண்டு அரசியல் இலாபம் தேடுவதற்காக சில கட்சிகளும் சில தரப்பினரும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் நாட்டின் அனைத்து கட்சிகளும் ஆலோசனைகளை அரசாங்கத்துக்கு முன் வைக்குமாறு நாம் கௌரவமாக கேட்டுக் கொள்கின்றோம். நாம் அனைவரும் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைந்து செயற்படுவோம்.

சர்வகட்சி மாநாட்டின் போது சில காட்சிகளில் ஆலோசனைகள் அரசாங்கத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளன. அந்த யோசனைகளை அரசாங்கம் ஆராய்ந்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

புரவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உடனடி உதவிகள் வழங்கிவைப்பு!
ஜயந்த கெட்டகொடவை உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் 17 ஆம் திகதி தீர்மானம் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழ...
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் அதிகார வரம்பை மீறி நடக்கிறார் - முகாமையாளரை அச்சுறுத்தியமைக்கு தொழிற்ச...