அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டம் இன்றுமுதல் கட்டம் கட்டமாக ஆரம்பம்!

Monday, September 14th, 2020

அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 50, ஆயிரம் பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலில் நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படையணி தலைமையகங்கள் மற்றும் இராணுவ பயிற்சிப் பாடசாலைகள் என 51 இராணுவ நிலையங்களில் இந்தப் பயிற்சிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஐந்து கட்டங்களின் கீழ் செயற்படுத்தப்படும் இத்திட்டமானது ஒரு மாத கால வதிவிட பயிற்சி திட்டமாகும். ஒவ்வொரு கட்டத்திற்கும் 10 ஆயிரம் பட்டதாரிகள் வீதம் 5 மாதங்களுக்குள் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கும் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

முழுமையான ஆற்றல்மிக்க பணியாளர்களாக தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பயனுள்ள பங்களிப்பை உறுதி செய்வதற்காக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் நேரடி கண்காணிப்பில் 7 பாதுகாப்பு படை தலைமையகங்களின் ஒருங்கிணைப்பில் இராணுவ பயிற்சி பணிப்பகத்தினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் மாவட்டங்களின்படி பங்கேற்கும் பட்டதாரிகள் பிரிக்கப்பட்டுள்ளனர். பங்கேற்பாளர்களுக்கு திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான கூடுதலான வாய்ப்புகள் வழங்கப்படுவதன் ஊடாக அவர்களின் அணுகுமுறைகள் மற்றும் திறன்களை மேம்படுத்திக்கொள்ள  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஆட்சேர்ப்பு முதல் ஓய்வு பெறும் வரை அரசதுறை ஊழியர்களின் மனநிலையை மாற்றுவதற்கான முக்கியமான தேவையை மையமாகக்கொண்டு இராணுவப் பயிற்சியின் ஊடாக நீண்ட கால மற்றும் குறுங்கால இலக்குகளில் திறம்பட மற்றும் வினைத்திறனாக பணியாற்றுவதற்கான தலைமைத்துவம், நிர்வாக திறன், இலக்கு மீதான கவனம், தன்நம்பிக்கை மற்றும் அரச பொறிமுறையின் நோக்கங்களை புரிதல் என்பவற்றை வளர்த்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: