அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு புதிய ஏற்பாடுகளுடன் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, July 28th, 2022

அரசாங்கம் தயாரித்து வந்த அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு புதிய ஏற்பாடுகளுடன் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்த 22 ஆவது திருத்தத்தில் பல்வேறு திருத்தங்கள் அவ்வப்போது முன்கொண்டு வரப்பட்டன.

இதனையடுத்து அதனை நீக்கிவிட்டு அடுத்த அமைச்சரவையில் புதிய ஏற்பாடுகளுடன் திருத்தத்துக்கு அனுமதி பெறப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு இலங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வை தேடும் வகையில் புதிய அரசியலமைப்பு வரையப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக குறிப்பிட்ட அவர், தமிழ் மக்களை அரசாங்கம் மாற்றுக்கோணத்தில் பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

நல்லிணக்க அலுவலகம் மற்றும் காணாமல் போனவர்களுக்கான நட்டஈடுகள் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும்.

முன்னைய காலத்தில் அனைத்து தரப்பிலும் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பாக தொடர்ந்தும் பேசி, பிரச்சினைகளை எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு செல்லமுடியாது.

எனவே தற்போதே பிரச்சினைகளுக்கு தீர்வுகள் முன்வைக்கப்படவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: