அரசாங்கத்தின் மீது பெப்பரல் குற்றச்சாட்டு!

Saturday, September 22nd, 2018

மாகாண சபைத் தேர்தலை மேலும் பிற்போட அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக பெப்பரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் இரண்டு மாத கால அவகாசம் தேவை என மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்விற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், எல்லை நிர்ணய அறிக்கை தொடர்ந்தும் தாமதமடைவது குறித்து அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதன் கருத்துக்களை கட்சித் தலைவர்களுக்கு அறிவிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி,

எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்காக இரண்டு மாதங்களுக்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, மேலும் இரண்டு மாதகால அவகாசம் கோரியுள்ளது.

இந்த நிலையில், தேர்தலை மீண்டும் பிற்போடுவதற்கான காரணியாகவே இதனைத் தாம் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதத்திலோ அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியிலோ மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இருந்த நம்பிக்கை தற்போது இல்லாது போயுள்ளது என பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts: