அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்!

Wednesday, March 23rd, 2022

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

உயர்மட்ட தூதுக் குழுவுடன் நேற்று மாலை இலங்கை வந்த அவர், இன்றையதினம் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பிராந்திய மற்றும் இருதரப்புக் கொள்கை விவகாரங்களை, துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் மேற்பார்வை செய்கின்றார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரை துணைச் செயலாளர் சந்திக்கவுள்ளார்.

அத்துடன், இன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ள இலங்கை – அமெரிக்கக் கூட்டாண்மை உரையாடலின் 4 ஆவது அமர்வுக்கு, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் ஆகியோர் இணைத்தலைமை வகிக்கவுள்ளனர்.

அத்துடன், கொழும்புத் துறைமுகத்திற்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க இராஜதந்திரி, வர்த்தக மற்றும் சிவில் சமூகத்தினரை சந்திக்கவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லூ மற்றும் இந்து – பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான கொள்கைத் துணைப் பாதுகாப்புச் செயலாளர் அமண்டா டோரி ஆகியோர் துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்டுடன் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: