அதீத வெப்பநிலை – சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் ஆபத்தில் – போதியளவு நீர் அருந்துமாறு சுகாதார தரப்பினர் கோரிக்கை!

இலங்கையில் பதிவாகியுள்ள அதீத வெப்பநிலை காரணமாக சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், நீரிழப்பு அபாயத்தில் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் (SLMA) தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
ஆபத்தில் உள்ளவர்கள் சூரிய ஒளியில் நடமாடுவதை கட்டுப்படுத்த வேண்டும். அத்துடன், நீரிழப்பு தவிர்க்க போதியளவு நீர் அருந்த வேண்டும். வயது வந்த ஒருவர் குறைந்தது 2.5 லீற்றர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைகளில் இருந்து, குறிப்பாக அத்தியாவசியமற்ற வெளிப்புற செயல்பாடுகளில் இருந்து விலக்கி வைக்குமாறு வைத்தியர் ஆரியரத்ன வலியுறுத்தினார்.
சிறுவர்கள் வீட்டிற்குள் அல்லது நிழலில் விளையாடுவதற்கு இடம் வழங்கப்பட வேண்டும். வெளியில் செல்லும்போது பாதுகாப்பு தொப்பிகளை அணியுமாறு சிறு குழந்தைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், தொழில்வழங்குநர்கள், தங்கள் ஊழியர்களின் தேவைகளை கவனிக்க வேண்டும். தேவைப்பட்டால் வேலை நேர அட்டவணைகளை சரிசெய்ய வேண்டும் என்று வைத்தியர் ஆரியரத்ன கூறினார்.
அத்தியாவசியமான சில வேலைப் பகுதிகள் உள்ளன. எனினும், தொழிலாளர்களுக்கு பொருத்தமான வசதிகளை வழங்குவதில் தொழில்தருநர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றும் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை அதிக அளவில் பதிவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, அனுராதபுரம், இரத்தினபுரி மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் சராசரி வெப்பநிலையை விட அதிக வெப்பமான காலநிலை பதிவாகியுள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை தாக்கத்தை ஏற்படுத்தும் என திணைக்களம் இன்று எதிர்வு கூறியுள்ளது.
எனவே, பொதுமக்கள் வெப்பம் தொடர்பான நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|