அதிகம் கடன்பட்ட நாடுகளுக்கு உதவ பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்கத் தயார் – சீன பிரதமர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரிடம் தெரிவிப்பு!

Thursday, March 2nd, 2023

ஆக்கபூர்வமான முறையில் அதிக கடன்பட்ட நாடுகளுக்கு உதவ பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராக உள்ளது என்று சீனாவின் பிரதமர் லீ கெகியாங் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

சீனா மத்திய தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நாடுகளின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சீனா பங்கேற்கத் தயாராக உள்ளது என்று லி கெகியாங், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் நேற்று(01) இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தரப்பினரும் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் சமமான சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சீனா கருதுவதாகவும் சீன பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் போன்ற கடன் சுமையில் உள்ள நாடுகளுக்கு ஒரு முக்கிய கடன் வழங்கும் நாடான சீனா, இறையாண்மைக் கடனை மறுசீரமைப்பதில் எந்தக் கட்சிகள் முன்னிலை வகிக்க வேண்டும் என்பது குறித்து பலதரப்பு வங்கிகளுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பீய்ஜிங்கில் இருந்து கடன் மறுசீரமைப்பு ஆதரவுக்கான முறையான உத்தரவாதம் இல்லாமல், இலங்கை பிணை எடுப்பிற்கு அனுமதி வழங்க சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருகிறது என்று முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

வங்குரோத்து அடைந்துள்ள இலங்கையின் இருதரப்பு கடனில் சுமார் 52 வீதத்தைக் கொண்டுள்ள சீனா, அரசுக்கு சொந்தமான கொள்கை கடன் வழங்கும் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி மூலம் இரண்டு வருட கடன் ரத்தை அறிவித்துள்ளது.

எனினும் இந்தியா 10 வருட கடன் ரத்தையும், 15 வருட கடன் மறுசீரமைப்பையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: